2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்புப் வலயத்தில் மீள்குடியேற்றத்துக்கு இணக்கம் : பஸில் ராஜபக்ஷ

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(பாலமதி, சரண்யா)

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்புப் வலயத்தில் உள்ள கீரிமலை, கட்டுவன், காங்கேசன்துறை மேற்கு மற்றும் தொண்டைமானாறு ஆகிய பகுதிகளில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கு பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து இணக்கம் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சபையின் அனுமதியைப் பெற்று அடுத்த வாரமளவில் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்ட மீளாய்வுக் குழுக்கூட்டம் இன்று யாழ். செயலகத்தில் பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே பொருளாதார அமைச்சர் மேற்கண்ட இணக்கம் தெரிவித்துள்ளார். 

வெடிபொருள் அபாயம் காரணமாக இதுவரை செய்கை பண்ணப்படாத விவசாய நிலங்களில் விரைவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விவசாயத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, இதற்குரிய நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்றும் பணிப்புரை விடுத்தார்.

மீள்குடியேறியுள்ள பகுதிகளில் தேவையான வசதிகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டதுடன் தீவகத்துக்கான போக்குவரத்து வீதியை விரைவில் திருத்தியமைக்குமாறும் கூறினார்.

உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இயங்காது உள்ள 80 பாடசாலைகளையும் விரைவில் இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

கிளிநொச்சியில் யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாயபீடம் மற்றும் பொறியியல்பீடம் ஆகியவற்றை அமைப்பதற்கு அடுத்த மாதமளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இக்கூட்டத்தில் துறைசார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன என்று யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி செயலகச் செயலாளர் திவாரட்ண, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், ஏ.சுமந்திரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான மு.சந்திரகுமார், சில்வெஸ்திரி அலன்ரின், திணைக்களத் தலைவர்கள், பொலிஸார், படைஅதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

altaltaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X