2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமது கருத்துக்களை பொலிஸார் செவிமடுப்பதில்லை என யாழ். அரச அதிகாரிகள் புகார்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
தமது கருத்துக்களை பொலிஸார் செவிமடுப்பதில்லை எனவும் தங்களின் மொழி பிரச்சினையை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் யாழ். அரச அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ்.குடாநாட்டின் சிவில் பாதுகாப்பு தொடர்பான அங்குரார்ப்பண கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது அரச அதிகாரிகளால் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிவில் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையிலான தொடர்புகள் மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்பில் தங்களுக்கு அக்கறை இருப்பதாக பொலிஸார் காட்டி கொள்வதாகவும் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை எனவும் யாழ்.செயலக அதிகாரிகள் கூறினர்.

அரச அதிகாரிகளின் கருத்துக்களை செவிமடுத்த யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தலுவத்த இந்த விடயம் தொடர்பாக தங்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்களது கருத்து வெளியிடும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கு யாருக்கும் தங்களின் சுதந்திரமான கருத்துக்களை வெளியிட முடியும் எனவும் யாருக்கும் பயந்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது கூறினார்.

இக்கூட்டத்தில் யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா, யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்.மாநகர முதல்வர், பிரதேச செயலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X