2025 மே 17, சனிக்கிழமை

படைவீரரின் துப்பாக்கிச் சூட்டில் இராணுவ அதிகாரி பலி; மற்றொருவர் காயம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 29 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணம், கேரதீவு பிரதேசத்தில் இராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படையதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொது அதிகாரி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று யாழ். படைத்தலைமையகம் - தமிழ்மிரருக்கு தெரிவித்தது.

சம்பவத்தில் கேரதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள 523ஆவது கெமுனுவொஸ் படைப்பிரிவைச் சேர்ந்த இரண்டாம் தர லெப்டினன் பதவிநிலை வகிக்கும் பஹலவத்த என்ற அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து சந்தேக நபரான இராணுவ வீரர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதான 523ஆவது கெமுனுவொஸ் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர், இராணுவத்திலிருந்து தப்பிச் செல்லும் நோக்கத்தோடு செயற்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த இரு தினங்களாக கடமைக்கும் சமூகமளிக்கவில்லை என்று இராணுவ இடாப்பு விபரங்கள் குறிப்பிடுகின்றன. 

இந்நிலையில், குறித்த வீரர் மறைந்திருந்த இடம் தொடர்பில் அறிந்த மேற்படி படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் அவ்வீரருடன் கலந்துரையாடி அவரை அழைத்து வருவதற்காக அவ்விடத்துக்குச் சென்றுள்ளனர். இதன்போது அதிகாரிகள் இருவருக்கும் படைவீரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கோபமடைந்துள்ள படைவீரர், தன்னிடமிருந்த துப்பாக்கியால் அதிகாரிகள் மீது சூடு நடத்தியுள்ளார். இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனைய அதிகாரி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவரான படை வீரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ். படைத்தலைமைய தகவல்கள் மேலும் தெரிவித்தன. (எம்.எம்)


You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAAR Friday, 30 December 2011 07:23 AM

    அப்போ இவருக்கு என்ன தண்டனை ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .