2025 மே 17, சனிக்கிழமை

யாழில் மீள்குடியேறிய மக்களுக்கு மின்சார இணைப்புக் கட்டணம் இலவசம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு வடக்கின் வசந்தத்தின் கீழ் மின்விநியோகத்திற்கான இணைப்புக் கட்டணத்தை இலவசமாக வழங்கவுள்ளதாக மின்சக்தி வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் வடமாகாண அலுவலத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் 5 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இவ் அலுவலகத்திற்கான அடிக்கல்லை  அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாட்டிவைத்தார்

அமைச்சர் சம்பிக்க ரணவக்க அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'யாழ். குடாநாட்டிற்கு 2012ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுமையான மின்சாரம் வழங்கப்படும்.  யாழ்ப்பாணத்தில் தற்போது 100க்கு 80 வீத மின்சாரமே வழங்கப்படுகின்றது. அத்துடன், யாழ்ப்பாணத்தில்  மின்சாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய வேலைத்திட்டங்களையும்  முன்னெடுத்து வருகின்றோம்.

அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் புதியதொரு மின்நிலையத்தை அமைக்கவுள்ளோம். கிளிநொச்சியிலிருந்து வடமாகாணத்திற்கான மின்சார விநியோகத்திற்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

யாழ். குடாநாட்டின் தீவகப்பகுதிக்கு சூரிய சக்தியிலான மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். விரைவில் இந்தப் பணி பூர்த்தியடைந்துவிடும்.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மின்பாவனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், சட்டவிரோத மின்பாவனையாளர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைக்கப்படவுள்ள இந்த ஜந்து மாடிக்கட்டிடம் வடமாகாணத்திற்கு வெளிச்சம் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்றார்

இதற்கான நிகழ்வில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின், யாழ். மாநாகர முதல்வர், யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலைய உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .