2025 மே 17, சனிக்கிழமை

சுகாதார சேவைகளை வழங்குவதில் யாழ். மாவட்டம் இலங்கையிலேயே முன் மாதிரியான மாவட்டம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

சுகாதார சேவைகளை வழங்குவதில் யாழ். மாவட்டம் இலங்கையிலேயே முன்மாதிரியான மாவட்டமாக கணிப்பிடப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை அறிவித்துள்ளது

இது தொடர்பாக அப் பணிமணை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது மாவட்டத்தில் வளப்பற்றாக் குறைகள் மத்தியிலும் பல்வேறு சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் மக்கள் மற்றும் ஏனைய அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் குடல் சார் தொற்று நோய்களான நெருப்புக் காய்ச்சல், வயிற்றுளைவு, வயிற்றோட்டம், செங்கமாரி போன்ற நோய்களைப் பொறுத்தமட்டில் நாட்டில் எமது மாவட்டமே நீண்ட காலமாக அதிகளவிலான நோய்தொற்றுக்களை கொண்டதாகக் காணப்படுகிறது.

இதற்கு முக்கியமான காரணம் உணவகங்களில் சுகாதார நிலைமைகள் சரியாகப் பேணப்படாமையால் மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடையாமையாகும்.

இதனைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பொலநறுவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றியளித்த பாவனையாளர்களை மையப்படுத்திய உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை எமது மாவட்டத்திலும் நடைமுறைப் படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு பொதுமக்கள், உணவு கையாளும் நிலைய உரிமையாளர்கள், உணவு கையாளுவோர் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள், அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடகங்கள் போன்றவற்றின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது.

இதனடிப்படையில் உணவு கையாளும் நிலைய உரிமையாளர்கள், உணவு கையாளுவோர், உள்ளுராட்சி மன்றப்பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோருக்கு மாவட்டத்தில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் விழிப்புணர்வுச் செயலமர்வுகள் மூலமாக கருத்துப் பகிர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு பாதுகாப்பான உணவு கையாளுதல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு திருத்தங்களை மேற்கொள்வதற்குப் போதுமான கால அவகாசமும் மாவட்ட மட்ட செயற்பாட்டுக் குழுவினாலும், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகர்களாலும் வழங்கப்பட்டது.

சுகாதார வசதிகள், பாதுகாப்பான உணவு கையாளுதல் போன்றவை தர மதிப்பீட்டுப் படிவத்தின் உதவியுடன் மதிப்பீட்டுக்குட்படுத்தப்பட்டு உணவு கையாளும் நிலையங்கள் எ,பி,சி,டி  என்ற நான்கு தரங்களில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எ சிறந்த தரத்தையும் பி திருப்திகரமான நிலைமையையும், சி முன்னேற வேண்டிய நிலைமையையும் டி தரங்குறைவான நிலைமையையும் குறிப்பிடுகிறது.

இதனடிப்படையில் அனைத்து உணவு கையாளும் நிலையங்களிலும் அந்தந்க நிலையங்களின் தர மதிப்பீட்டுக்கான சான்றிதழ்கள் சுகாதாரத் திணைக்களத்தினால் குறித்த கால இடைவேளையில் மீள்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வழங்கப்படவுள்ளது.

இச்சான்றிதழ்களை வாடிக்கையாளருக்குத் தெரியத்தக்க வகையில் ஒவ்வொரு உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களும் வைத்திருக்கவேண்டியது கட்டாயமாகும்.

இச்சான்றிதழ்களின் அடிப்படையில் குறித்த உணவு கையாளும் நிலையத்தின் தரத்தை வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் இலகுவாக அறிந்து கொள்ள முடியும். தரங்குறைவான இடங்களை தவிர்த்து தரமான இடங்களில் தமது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு  மக்களை சுகாதாரத் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.

இதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான  உணவு கிடைப்பதை உறுதி செய்வதுடன் உணவு கையாளுவோரின் செயற்பாடுகளையும் சாதாகமாக மாற்றிக் கொள்ளமுடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யுமிடங்களில் குறைபாடுகளைக் கண்டால் உடனடியாக அப் பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொண்டு உங்களது முறைப்பாடுகளைத் தெரிவித்துக் கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .