2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐ.நா.வில் முறையிடப்படும்: மாவை எம்.பி

Menaka Mookandi   / 2012 ஜூன் 18 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடவுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னால் நடத்தப்படவிருந்த காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டம் நீதிமன்ற உத்தரவுக்கமைய நிறுத்தப்பட்டமையைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் மேற்கண்டவாறு கூறினார்

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மாவை எம்.பி,

'தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும். அவர்களை வெளியேற்றுவதற்கான எமது சாத்வீகப் போராட்டம் தொடரும். தமிழ் இனத்திற்கு எதிராக எங்கு அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறதோ அங்கு எல்லாம் எங்களின் ஜனநாயக ரீதியான அறவளிப் போராட்டங்களை எமது மக்களுக்காக தொடர்ந்து நடத்துவோம்.

இலங்கை அரசினால் அதன் அரச படைகளினால் மற்றும் பௌத்த மத குருமார்களினால் தமிழர்களின் தாயக பூமியை அபகரிக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கு எதிரான மக்கள் சக்திப் போராட்டம் விரிவடையும்.  அன்று உயர்பாதுகாப்பு வலயம் என்று கூறியவர்கள் இன்று அந்த நிலங்களை சிங்கள மயமாக்கி புத்த விகாரைகள் அமைத்து பௌத்த பூமியாக்க முனைகின்றார்கள்' என்று மாவை எம்.பி. மேலும் கூறினார்.

இதன்போது உரை நிகழ்த்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் கூறுகையில்,

தமிழ் தேசியத்தின் இறைமையை வலியுறுத்தும் நிலங்களைக் காத்துக் கொள்வதற்காக சர்வதேசத்திடம் முறையிடுவோம். தமிழ் மக்களுக்கு சொந்தமான தாயக பூமியை இலங்கை அரச படைகளும், பௌத்த மத்தவர்களும் திட்டமிட்டு ஆக்கிரமித்து வருகின்றார்கள். தமிழ் மக்களின் தனித்துவமாக குடிப்பரம்பலை மாற்றுவதற்கு தமிழ் மக்களின் நிலங்களை பறித்து அவர்களை இராணுவத்தினர் வெளியேற்றி வருகின்றனர்;.

தமிழர் வாழ்விடங்களில் சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகள் என தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து அராஜகம் செய்கிறது இலங்கை அரசு. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டு தமிழர்களின் நிலங்களைக் கொள்ளையடிக்கிறது அரச படைகள்.

ஜனநாயக ரீதியான எமது போராட்டத்தை சட்டம் போட்டு தடுக்கிறது அரசு. எந்தத் தடைகள் வந்தாலும் எமது மக்களுக்காக ஜனநாயக ரீதியான பாய்ச்சல் பலமாக இருக்கும். தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பு படைகள் வெளியேறும் வரை எமது மக்களுக்கான போராட்டம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும். அதை எந்த சக்தியாலும் தடைபோட முடியாது' என்றார்.

ஜனநாயக மக்கள் முன்னிணி உறுப்பினர் குமரகுருபரன் உரையாற்றுகையில்,

'எம்மை அடக்க நினைக்கிறவர்களுக்கு எதிராக ஒன்றினைந்து உரிமையுடன் போராடுவோம். இலங்கையில் அரசு பாரிய இனவாதத்தை தூண்;டிவிட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்த தடை உத்தரவு கூட அரசின் திட்டமிட்ட செயல் அதற்கு பொலிஸார் உடந்தையாக இருக்கின்றார்கள்.

எமது இலக்கை எட்டுவதற்கான போராட்டம் இன்று நடைபெறாவிட்டாலும் பிறிதொரு வடிவத்தில் மீண்டும் தொடரும். தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒருமித்த குரலில் ஒன்றுபட்டு முடிவெடுப்போம்' என்றார்.

ரெலோ கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் உரையாற்றுகையில்,

நெருக்கடியான சூழலில் தான் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கின்றோம். தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றினைந்துள்ளமையே எமது போராட்டத்தின் பாரிய வெற்றி.

அமைச்சர் டக்ளஸ் கூறினார் தனது கட்சிக்கு வாக்களித்து இருந்தால் இந்த நில ஆக்கிரமிப்பை தடுத்திருப்பதாக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சரே நில ஆக்கிரமிப்பு தமிழர் பகுதிகளில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மக்கள் போராட்டங்களை கட்சி பேதமின்றி நடத்தி தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராட வேண்டும். அரசு தடைகள் போடப் போட தடைகளை உடைத் தெறிந்து போராடுவோம்' என்றார்

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், நவசமாயக் கட்சியினர், ஜனநாயக மக்கள் முன்னணியினர், ஐக்கிய சோஷலிசக் கட்சியினர் ஆகியோர் கூட்டாகக் கலந்து கொண்டிருந்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X