2025 மே 19, திங்கட்கிழமை

'சொந்த இடங்களில் குடியமர்வதை தடுப்பது தேசிய இருப்புக்கு விடப்படும் சவாலாகும்'

Menaka Mookandi   / 2012 ஜூன் 18 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

தமிழர்களாகிய எமது காணிகள் பறிக்கப்படுவதும் எங்களுடைய சொந்த இடங்களில் நாம் குடியமர்வதைத் தடுப்பதும் எமது தேசிய இருப்புக்கு விடப்படும் மிக அடிப்படையான சவால்களாகும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கெதிரான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிக்கையின் முழு விபரமும் வருமாறு,

'மே 2009இற்கு முன்னரான மூன்றாண்டுகளில் யுத்தமென்ற போர்வையில் இடம்பெற்ற இனப்படுகொலை எமது இனத்தினுடைய ஆட்பலத்தைக் குறைப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஆனால் எமக்கெதிராகப் புரியப்படும் இனப்படுகொலை தனியே உயிரிழப்புகளோடு சம்பந்தப்பட்டதல்ல என்பதனை நாம் அறிவோம். உயிரிழப்புகளோடு சேர்ந்தவாறாக எமது தாயகத்தைச் சூறையாடும் வேலைகளும் தொடர்ச்சியாக மிக நீண்ட காலமாக இடம்பெற்று வந்தே உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கூட்டு வடிவத்தையே நாம் தமழிருக்கெதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையென அறிந்து வைத்துள்ளோம்.

மே 2009இற்குப் பின்னர் யுத்தம் ஓய்ந்துள்ள வேளையில் இவ்வினவழிப்புச் செயன்முறையானது நாம் எம்மை ஓர் தேசமாக அதாவது எம்மை நாமே ஆளுவதற்கு எம்மைத் தகுதியானவர்களாக்கும் எமது தேசிய இருப்பின் பல்வேறுபட்ட விடயங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை.

எமது தேசிய இருப்பின் அடையாளங்களை - குறிப்பாக எமக்கான தனித்துவமான நிலப்பரப்பு ஒன்றை இல்லாமல் செய்தால் நாம் சுயநிர்ணய உரிமைக்குத் தகுதியற்றவர்களாகி விடுவோம் என்று சிங்கள அதிகார வர்க்கம் கணக்குப் போடுகின்றது.

பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் சர்வதேசத்தையும் தமிழ்த் தரப்பையும் தொடர்ச்சியாக ஏமாற்றி அதற்கிடைப்பட்ட காலத்தில் எமது தேசிய இருப்பிற்கான அடையாளங்களை முற்று முழுதாக அழித்து விட வேண்டும் என மிக நேர்த்தியாக திட்டம் போட்டு சிங்கள அதிகார வர்க்கம் செயற்பட்டு வருகின்றது.

நல்லிணக்கம் என்ற பெயரில் மிக அடிப்படையான விட்டுக்கொடுப்புக்களைச் செய்துள்ள, செய்து வரும் தமிழர் தலைமைத்துவம் எமது நிலங்களைத் தொடர்ச்சியாகப் பறிக்கும் அரசின் செயற்பாட்டில் எந்தவொரு நல்லிணக்க சமிக்ஞையும் இல்லை என்பதனை உணர வேண்டும். மாறாக இந்த விட்டுக் கொடுப்புக்கள் எமது அரசியல் அந்தஸ்த்தை நாமே தாழ்த்தும் முகமாகவே அமைந்துள்ளன என்பதனையும் உணர வேண்டும்.

இந்த இடத்தில் தான் நாம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழும்புகின்றது. எமது நிலங்கள் எங்களுடையவை – தமிழர்களுக்குரியவை என்ற வாதத்தை முன்வைப்பதற்கு நாம் எமது தேசிய அந்தஸ்த்தை வலியுறுத்த வேண்டும்.

ஏனென்றால் நிலங்களைப் பறிப்பதென்பது வெறுமனே நிலவுகையிலிருக்கும் சட்டத்தைச் சரிவரப் பின்பற்றாமை பற்றிய பிரச்சனை அல்ல. (சில சந்தர்ப்பங்களில் சட்டத்திற்கு உட்பட்ட வகையிலேயே எமது நிலங்கள் பறிக்கப்படுகின்றன என்பதனை நாம் கவனிக்க வேண்டும்). இதில் உண்மையான பிரச்சனை இந்த நிலங்களின் நியாயமான உரிமையாளர்கள் யார் என்பதனைப் பற்றிய கேள்வியே.

இதனால் தான் தேசம் - தாயகம் - சுயநிர்ணயம் என்பவற்றை வெறுமனே மேடைகளில் பயன்படுத்தும் அலங்கார வார்த்தைகளாகவன்றி அரசியல் தீர்வு உட்பட எம்மக்கள் தொடர்பிலான சகல பிரச்சினைகளையும் விளங்கிக் கொள்வதற்கும் அது தொடர்பிலான வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு அவசியமான- ஒரு விட்டுக்கொடுக்கப்பட முடியாத அம்சமாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக சொல்லி வந்திருக்கின்றது.

தமிழர் ஒரு தேசம் என்ற வாதத்தை முன்வைக்காமல் எம்மால் நில ஆக்கிரமிப்புக்கெதிராகக் குரல் கொடுக்க முடியாது என்பதனைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திட்டவட்டமாகச் சொல்லி வைக்க விரும்புகின்றது.

சர்வதேச சமூகமும் நிலப்பறிப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும், அரசியல் தீர்வு தொடர்பிலான விடயங்களிலும் தமிழர் ஓர் தேசம் என்ற அங்கீகாரத்தை வழங்கித் தமது தலையீட்டை நெறிப்படுத்தத் தவறின் தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு முயற்சிகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையோ ஜெனிவாத் தீர்மானமோ ஏன் நில ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தவில்லை என ஆராய்ந்தால் நாம் இந்த முடிவுக்கே கட்டாயம் வந்தடைவோம். தமிழ் தரப்புகளின் முன் உள்ள இன்றைய முக்கியமான கடமை சர்வதேசத்திற்கு இதனை மிக அழுத்தமாகச் சொல்லுவதேயாகும்.

எமது தேசியப் போராட்டத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கக் கூடிய புலம்பெயர் தமிழ் மக்களும் இவ்விடயத்தினை முன்னிறுத்தி தொடர்ச்சியாகப் போராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்' என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X