2025 மே 19, திங்கட்கிழமை

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்: ரி.கனகராஜ்

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

வன்னிப் பகுதியில் சேவைக் காலத்தை நிறைவு செய்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இதுவரை இடமாற்றம் வழங்கப்படாமையினைக் கண்டித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாடு தொடர்பாக யாழ். மனித உரிமை ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவ்வாணைக்குழுவின் இணைப்பதிகாரி ரி.கனகராஜ் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

தற்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த முறைப்பாடு தொடர்பாக தெரிவிக்கையில்,

'யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 104 ஆசிரியர்கள் இணைந்து இந்த முறைப்பாட்டினை யாழ். பிராந்திய அலுவலகத்தில் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் பதிவு செய்துள்ளனர்.

வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் நியமனத்தில் இருந்து தமது சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள இந்த 104 ஆசிரியர்களும் இடமாற்றத்துக்கு தகுதியானவர்கள் என மாகாண கல்வித் திணைக்களம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருந்தது.

எனினும் இவர்கள் ஏற்கனவே பணியாற்றி வரும் பாடசாலைளுக்கு பதிலீட்டு ஆசிரியர் பட்டியலை தயாரிக்க வேண்டியுள்ளது என்ற காரணத்தினைக் காட்டி குறித்த 104 ஆசிரியர்களுக்கும் யாழ்ப்பாணத்துக்கான இடமாற்றம் என்பது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் குறித்த ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந் நிலையிலேயே பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமக்கான இடமாற்றம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பிலான முறைப்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமைதாங்கி இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார் என யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி ரி.கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X