2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் போதைப்பொருள் பாவனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

Super User   / 2012 ஜூலை 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழில் போதைப்பொருள் பாவனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஸ்ரீ குகநேசன் தெரிவித்தார்

யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"யாழில் பாரிய குற்றச்செயல்களாக கடந்த வாரம் 14 முறைப்பாடுகள் கிடைக்க பெற்று, 9 குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ். போதனா வைத்தியசாலை ஊழல் மற்றும் வைத்தியரின் வீடு தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் 108 பக்க குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதன் பிரதிகள் 4 எடுக்கப்பட்டு அதில் ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனை விட வவுனியா பிரதேசத்தில் ஏழு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 800,000 ரூபா பெறுமதியான பொருட்களும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் வீடு உடைத்து பொருட்கள் சில களவாடப்பட்டமை தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். இந்த சந்தேகநபர்களிடம் இருந்து களவாடப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன.

முருங்கன் பிரதேசத்தில் 170,000 ரூபா பெறுமதியான சிறிய ரக உளவியந்திரம் ஒன்று களவாடப்பட்டுள்ளது. களவாடப்பட்ட இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன், இந்த உழவு இயந்திரத்தினைக் களவாடியதாக குற்றஞ்சாட்டப்படும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, செட்டிக்குளம் மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் விடுதலை புலிகளினால் கைவிடப்பட்ட பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் என்பன மீட்கப்பட்டுள்ளன" என்றார்.

இங்கு உரையாற்றி யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா,

"நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 24 பேர் யாழ். குடாநாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் மூன்று கத்திக்குத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வீடு உடைத்து பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பாக மூன்று முறைப்பாடுகள் உட்பட யாழ். பிரதேசத்தில் 8 பாரிய குற்றச்செயல்கள் கடந்த வாரம் நடைபெற்றுள்ளன.

அத்துடன் காங்கேசந்துறை பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக தனியார் பேரூந்தில் பயணம் செய்த இருவரது கையடக்க தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளன" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X