2025 மே 19, திங்கட்கிழமை

நிமலறூபனின் மரணத்துக்கு எதிரான கண்டனஆர்ப்பாட்டத்துக்கு த.தே.ம.மு அழைப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 13 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா சிறைச்சாலையில் வைத்து மரணமான தமிழ் அரசியல் கைதியான நிமலறூபனின் மரணத்துக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் தமழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்., நெல்லியடி பஸ் நிலையத்துக்கு முன்னால் நடத்தப்படவுள்ளது.

இதில் பொது மக்கள், பொது அமைப்புக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் தலைவர்கள் அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களாலும் விசேட அதிரடிப்படையினராலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலினால் நிமலறூபன் கொல்லப்பட்டதுடன், டில்றுக்சன் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டதால் கோமாநிலையில் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை மேலும் பல அரசியல் கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாமடைந்துள்ளார். முன்னாளர் போராளிகள் சிறப்பாகப் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்படும் செயற்பாடுகளை அரசாங்கம் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருவதான பொய்ப் பிரசாரங்கள்  மூலம் அரசாங்கத்தை சர்வதேச நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவதற்காக செயற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையிலேயே இந்த வவுனியா சிறைச்சாலையில் மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தாக்குதல்கள் தமிழ் அரசியல் கைதிகள் மீது நடத்தப்படுவது இது முதற்தடவையல்ல. அன்று வெலிக்கடையிலும், பின்னர் பிந்துனுவௌவிலும் இன்று வவுனியாவிலுமென இது ஒரு தொடர்கதையாகவே மாறிவருகின்றது. தமிழர் அரசியலில் இயங்கு சக்தியாக திகழ்ந்தவர்கள் எனக் கருதியே இவர்கள் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தகைய கொலைகளை கண்டித்தும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கக் கோரியும், தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி சுவீகரிப்பை கண்டித்தும் எதிர்வரும் 18-07௨012 புதன்கிழமை முற்பகல் 11.00 மணி – 12.00 மணிவரை நெல்லியடி பஸ்நிலையத்தில் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை அமைதியாகவும், ஐனநாயக முறையிலும் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இப்போராட்டத்திற்கு பொது மக்கள், பொதுஅமைப்புக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் தலைவர்கள் அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புடனும் உரிமையுடனும்  அழைப்புவிடுக்கின்றோம்' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X