2025 ஜூலை 05, சனிக்கிழமை

மத்தியில் சுழற்சி முறையிலான ஆட்சி நடைபெறவேண்டும்: க.சிற்றம்பலம்

Kogilavani   / 2014 ஜூலை 14 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த்


“மாநிலத்தில் சுயாட்சியும் மத்தியில் சுழற்சி முறையிலான ஆட்சியே அமைய வேண்டும். மத்தியில் ஒவ்வொரு முறையும் சிங்கள ஆட்சியாளர்களே ஆட்சிபீடம் ஏறுவதனால் தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. எனவே மத்தியில் சுழற்சி முறையிலான ஆட்சி நடைபெறவேண்டும்” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

 “வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை நாங்கள் இனி விரும்பவில்லை” எனவும் அவர்  தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகவும் விளங்கிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) அனுஷ்டிக்கப்பட்டது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரிக்கப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு மாகாணமானது மீண்டும் இணைக்கப்படும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. அவை இணைக்கப்படுவதற்கான சாத்தியங்களும் இல்லை. இந்நிலையில் அவை இணைக்கப்படுவதை நாம் விரும்பவும் இல்லை.

ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இனப்பரம்பல் விகிதாசாரம் அதிகரித்துள்ளது. அதாவது, சிங்களவர்களின் இனப்பரம்பல் தற்போது கிழக்கு மாகாணத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது. எனவே கிழக்கு மாகாணத்தை இனி வடக்கு மாகாணத்துடன் இணைப்பதை நாம் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

13 தேவையில்லை, சமஷ்டி  அரசியல் தீர்வே தேவை


தமிழ் மக்களுக்கு 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரமான தீர்வு தேவையில்லை. சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே தேவை. 13ஆம் திருத்தம் என்பது தமிழ் மக்களின் அபிலாசை அல்ல என்பதுடன், அது தமிழ் மக்களின் பிரதிநிதிகளால், கொண்டுவரப்பட்டதும் இல்லை. அதனை இலங்கை இந்திய அரசாங்காங்கள் இணைந்து கொண்டுவந்தன.

எனவே அதனை பற்றி கதைப்பதோ அல்லது அதற்காக குரல் கொடுப்பதோ முக்கியம் இல்லை. தமிழ் மக்களுக்கான தீர்வு சமஷ்டி முறையே. அதற்காகத்தான் குரல் கொடுக்க வேண்டும்.

1949 ஆம் ஆண்டு தொடக்கம் சமஷ்டி  முறையே தமிழ்மக்களுக்கான தீர்வு என குரல் கொடுத்தும் வலியுறுத்தியும் வருகின்றோம். அதனையே நாம் இன்றும் செய்ய வேண்டும். தமிழ் மக்கள் இதுவரை காலமும் அனுபவித்த துன்ப துயரங்களுக்கு சமஷ்டி முறையான தீர்வே அவசியமானது.

எனவே நாம் 13ஆம் திருத்தம் பற்றி இன்றைய காலகட்டத்தில் கதைப்பதோ அல்லது அதற்காக குரல் கொடுப்பதோ முக்கியம் இல்லை. தமிழ் மக்களுக்கான தீர்வு சமஷ்டி முறையிலான தீர்வு என்றே குரல் கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .