2025 ஜூலை 05, சனிக்கிழமை

தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதில்லை: மாவை

Kogilavani   / 2014 ஜூலை 14 , மு.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், யோ.வித்தியா

“இலங்கை அரசாங்கம், தமிழ்மக்கள் விரும்பாத நபரை மீண்டும் வடமாகாண ஆளுநராக நியமித்து தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பு மற்றும் அபிலாசைகளுக்கு மதிப்பளிப்பதில்லை” என மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகவும் விளங்கிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“அரசாங்கம் எமக்கு தந்த வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை மீறியுள்ளது. நாம் அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்புவதில்லை என்ற போதிலும் ஒரு நல்லிணக்க சமிக்ஞையாக வடமாகாண ஆளுநர் மாற்றப்பட்டு தமிழ்மக்களின் நலனில் அக்கறையுடையவர் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என நாம் எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால், தமிழ் மக்கள் விரும்பாத, போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவரை தொடர்ந்தும் வடமாகாண ஆளுனராக நியமித்து இருப்பது எமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஜனாதிபதியின் முகங்களே பொதுபலசேனாவும் இராவண சேனா


இலங்கை ஜனாதிபதியின் பல முகங்களாகவே பொது பலசேனா, இராவண சேனா போன்ற சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

பொது பலசேனா, இராவண சேனா போன்ற சிங்கள பேரினவாத அமைப்புக்கள் தமிழரசு கட்சியை தடைசெய்ய வேண்டும் என முயல்கின்றனர். அத்துடன் தமிழரசு கட்சிக்கு எதிராக இதுவரை எட்டு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கிலே பகற்கொள்ளையர்கள் போல தமிழ் மக்களின் காணிகளை பிடிக்கின்றனர். மேலும் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்கள், இராணுவத்தினரின் உதவியுடன் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கின்றார்கள்.

அத்துடன், இராணுவத்தின் உதவியுடன் தமிழர் தேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையிலே தமிழர் தேசம் என்று ஒன்று இல்லை என்பதை நிரூபிக்கவே அரசாங்கம் இவ்வாறு திட்டமிட்டு செயற்படுகின்றது. 

தமிழ் மக்களின் இருப்பு அழிக்கப்பட்டு வருவதையும், அடையாளங்கள் அழிக்கப்படுவதினைத்  தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து தமிழ்மக்களையும் ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

மேலும், தமிழ் மக்களுக்கு ஆதரவு வழங்கும் சிங்கள முற்போக்கு கட்சிகளையும் இணைத்து எமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .