Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2015 ஏப்ரல் 11 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு குற்றத்துக்காக ஒரு தடவைக்கு மேல் ஒருவர் தண்டிக்கப்பட முடியாது என்பது சட்டமாகும். அந்த வகையில் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் நடத்தவுள்ள உள்ளக விசாரணையில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் விசாரிக்கவேண்டும் எனக்கோருவது சட்டத்துக்கு மாறான ஒரு விடயமாகும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் சனிக்கிழமை(11) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் போராளிகளை போருக்குப் பின்னர் கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்குட்படுத்தியும், கொலை செய்தும், புனர்வாழ்வுக்குட்படுத்தியும் உள்ள நிலையில் மீளவும் அவர்களை விசாரிக்கவும் தண்டிக்கவும் இயலாது.
தமிழர் தாயகத்தில் இடம் பெற்ற இன அழிப்பு, போர்க்குற்றம், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் உள்ளக விசாரணையினை வலியுறுத்தி நிற்கின்றது.
இந்நிலையில் உள்ளக விசாரணையில் போரில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரச படைகள், துணை ஆயுதக் குழுக்கள் விசாரிக்கப் படவேண்டும் என ஒரு தரப்பு இப்போது பேச ஆரம்பித்திருக்கின்றது.
ஆனால், இவ்வாறான உள்ளக விசாரணையில் தமிழீழ விடுதலைப்; புலிகளை விசாரணைக்குட்படுத்த முடியாது. இதற்கான காரணம், விடுதலைப் புலிகளின் போராளிகள் போர் நிறைவடைந்ததன் பின்னர் விடுதலைப் புலிகள் என்பதற்காக கைகள் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்ட காட்சிகளுடன் கூடிய ஒளிப் பதிவுகள், புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன.
இதற்கு மேலதிகமாக முன்னாள் போராளிகள் பலர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள், பலர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே சட்டத்தின் படி ஒரு குற்றத்துக்காக ஒரு தடவை மட்டுமே ஒருவர் தண்டிக்கப்படவோ, விசாரிக்கப்படவோ முடியும். எனவே புலிகளின் போராளிகள் முன்னதாகவே தண்டிக்கப்பட்டுள்ளார்கள். விசாரிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே மீண்டும் விசாரிப்பது மற்றும் தண்டிப்பது ஒத்துக்கொள்ள முடியாத ஒரு விடயமாகவே நாங்கள் பார்க்கிறோம். இந்நிலையில் இவ்வாறு இரு தரப்பும் விசாரிக்கப்படவேண்டும். எனக்கோருபவர்கள் முன்வைக்கும் நியாயம் என்னவென்றால் இரு தரப்பும் விசாரிக்கப்பட்டாலே நல்லிணக்கம் உருவாகும் என்பதாகும்.
ஆனால் இந்த நியாயம் இனப்படுகொலை குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான முயற்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். மேலும் அவ்வாறான நியாயத்தைக்கோரும் தரப்புக்கள் உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஒரு விசாரணைக் குழுவினை நியமிக்க உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால் அது சாத்தியமற்ற ஒன்றாகும் என்பதே எமது நிலைப்பாடு.
உண்மைக்கும், நல்லிணக்கத்துக்குமான விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டுமானால் முதலில் இனப்படுகொலை குற்றவாளிகள் சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். அவ்வாறு தண்டிக்கப்படாமல் அது சாத்தியமற்றதாகும்.
இனப்படு கொலை உள்ளிட்ட பல மாபெரும் குற்றங்கள், இடம்பெற்ற பகுதிகளில் சர்வதேச விசாரணை மூலம் தண்டனை வழங்கப்படாமல் உண்மைக்கும், நல்லிணக்கத்துக்குமான விசாரணை குழு சாத்தியமற்றது என ஐ.நா சபையே குறிப்பிடுகின்றது. எனவே நாம் குறிப்பிடுவது நல்லிணக்கம் என்ற பெயரில் முன்னதாகவே தண்டிக்கப்பட்ட மற்றும் விசாரிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை மீண்டும் விசாரிக்கவும், தண்டிக்கவும் முடியாது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago