Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ கிடையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்ற சம்பிரதாயம் நடைமுறைகள், வழமைகள் போன்றவற்றுடன் சம்மந்தப்படுகின்ற ஒரு விடயத்தில் நான் சாதாரணமாக தலையிட்டிருக்கமாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ கிடையாது.
எல்லாவற்றுக்கும் மேலாக வழமைகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை நாம் இன்றைய சூழ்நிலையில் கணக்கில் கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட இனமோ, குழுவோ எடுத்த முயற்சி என்றில்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து இரத்தம் சிந்தாத அமைதியாக ஏற்படுத்தப்பட்ட புரட்சியே இன்றைய நிலைமைக்கு காரணம்.
அதற்கு அரசியல் கட்சிகள்கூட உரிமை கோர முடியாது. தமிழ் மக்கள் தம் வழிநடத்தலுக்கு ஏற்ப செயற்பட்டதாக நாடாளுமன்றத்தில் சம்பந்தன், ஊடகங்கள் மூலமாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் நன்றி கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுவதற்கு முன்பே தபால் மூலம் 50,000 க்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்துவிட்டார்கள். பொது வேட்பாளரின் பெயர் தெரியப்படுத்துவதற்கு முன்பே நாடுபூராவும் மக்கள் அத்தகைய வேட்பாளருக்கு வாக்களிக்க தீர்மானித்துவிட்டார்கள். வேட்பாளர்களின் பெயர் வெளியாகியவுடனேயே தமிழர் விடுதலைக் கூட்டணி தனது ஆதரவை பொது வேட்பாளருக்கு தெரியப்படுத்தி ஊடகங்கள் மூலமாக அறிக்கை வெளியிட்டது.
எனது அபிப்பிராயத்தின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வை மக்களிடமே விட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் இன்னும் கூடுதலான வாக்குகளை பொது வேட்பாளர் பெற்றிருக்க முடியும். த.தே.கூட்டமைப்பின் அறிக்கையே பொதுவேட்பாளர் பெற வேண்டிய வாக்குகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பற்றி கூறுவதற்கு முன்பு தேசிய நிறைவேற்றுக் குழுவில் சம்பந்தனை நியமித்தது புத்திசாலித்தனமற்ற செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஏனெனில், அச்சபை மந்திரி சபையிலும் பார்க்க அதிகாரம் கூடியதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறானால் சரியோ, பிழையோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முகவராக சம்பந்தன் செயற்படுகின்றார் என்ற கருத்தே மக்களுக்கு ஏற்படுகின்றது.
பிரதமரின் நடவடிக்கை எனது சிந்தனைக்கு வலுவூட்டுகின்றது. சிறுபான்மை மக்களை அவர் புறக்கணித்து அநாதைகளாக்கிவிட்டார். உண்மையில் பகிரங்கமாக அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சம்பந்தனையும் வளர்ச்சி அடைய உதவுவதால், நேரடியாக சிறுபான்மை மக்கள் அவமதிக்கப்படுகின்றனர்.
60 ஆண்டுகளுக்கு மேல் நான் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதோடு ஒரு காலத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு கட்சியின் தலைவராக செயற்பட்டவன். நாடாளுமன்றத்தை நீடிப்பதற்காக நடத்தப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பை எதிர்த்து ஜனநாயகத்தை காப்பதற்காக பதவிகளைத் துறந்த ஒரேயொரு கட்சியாகும். இத்தகைய பெறுமதிமிக்க கட்சியை ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்பட்ட ஒரு அமைப்பைக் கொண்டு முற்று முழுதாக அழிக்க முயற்சித்த கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
பிரதமர் யாழப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயம் மேற்கொண்டபோது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகிய நான் அங்கிருந்த போதும் பிரதமர், என்னை கண்டுகொள்ளவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சிறுபான்மைக் கட்சிகளை ஒழித்துக் கட்டுவதில் ஈடுபட்டுள்ளார். சகல கட்சிகளும் ஆதரவு வழங்கியும் அக்கட்சிகளை ஒன்றிணைத்து செயற்பட தவறிவிட்டார். சிறுபான்மை கட்சிகளான தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறை தானே தீர்த்து வைக்காமல் ஜனாதிபதி உதவியை நாடி தோல்வி கண்டவர்.
2004ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 95 சதவீதம் வாக்குகளைப் பெற்று 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தது, உலகில் எந்த நாட்டிலும் நடக்காத பெரும் மோசடியாகும். இதே த.தே.கூ 2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பத்து சதவீதமான வாக்குகளைக்கூட பெற முடியவில்லை. உதாரணமாக 7 1/2 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட யாழ். தேர்தல் மாவட்டத்தில் 63,000 வாக்குகளையே பெற்றது.
25 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் கூட யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்த்த எதுவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இத்தகைய அமைப்பின் தலைவர், ஒரு பொறுப்புள்ள பதவியை அடைய வேண்டுமானால் மேலே கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு உடன் பரிகாரம் தேடவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago