2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பை வரவேற்கின்றேன்:டக்ளஸ்

Gavitha   / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதவியேற்றிருப்பதன் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முன்வந்திருப்பதை வரவேற்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பல் அந்த கட்சி, நேற்று புதன்கிழமை(02) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

'அர்த்தமற்ற பகைமையுணர்வை கொட்டித்தீர்ப்பதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிடமுடியாது. யாருடன் பேசி எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமோ அவர்களுடன் எமது மக்கள் சார்பாக கைகுலுக்கி பேசியே தீரவேண்டும். அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் ஊடாக எமது மக்களுக்கான அரும் பெரும் பணிகளை ஆற்றமுடியும். அரசியல் தீர்வுக்கும் வித்திட முடியும்.

கடந்த காலங்களில் போதிய அரசியல் பலம் இன்றியே நாம் அரசில் அங்கம் வகித்து, ஆற்றமுடிந்த பணிகளை எமது அரசியற் பலத்துக்கு ஏற்றவாறு ஆற்றியிருக்கின்றோம். இன்று எமது வழிமுறையை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயலாற்ற முன்வந்திருப்பதை நாம் வரவேற்கின்றோம்.

கடந்த காலங்களில் நாம் விடுத்த பகிரங்க அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்றே இதே வழிமுறைக்கு வந்திருந்தால் எமது மக்களுக்கு என்றோ விமோசனம் கிடைத்திருக்கும். காலம் கடந்தாவது எமது நடைமுறை யதார்த்த வழிமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றிருக்கின்றது.

ஏற்றுக்கொண்ட வழிமுறைமீது உண்மையுள்ளவர்களாகவும் விசுவாசம் மிக்கவர்களாகவும் செயலாற்றி  நடைமுறையிலும் தம்மை அடையாளப்படுத்தவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

போதிய அரசியல் பலம் இன்றியே நாம் அரசில் இணைந்து எமது நல்லிணக்க முயற்சியால் சாதித்ததை விடவும், அரசியல் பலத்தோடு அரசாங்கத்தில் இணைய முன்வந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விருப்பமுடன் செயலாற்றினால் எம்மை விடவும் பல மடங்கு சாதிக்கமுடியும் என்பதை எமது அனுபவத்தின் ஊடாக நாம் கூறிவைக்க விரும்புகின்றோம்' என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .