2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘ஆதாரம் இருந்தால் தடுத்து நிறுத்துவேன்’

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கின்ற காணிகளில் பொதுமக்களின் காணிகளில் விவசாயம் செய்யும் படையினர், அதிலிருந்து விளையும் பயிர்களை சந்தைகளில் விற்பதில்லை என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

அவ்வாறு படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், அதனை உடனடியாகத் தான் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், அவர் மேலும் கூறினார்.

யாழ்ப்பாணம், கோவில் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்வதால், பல்வேறு பாதிப்புகளை மக்கள் எதிர்நோக்கி வருவதால், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில், படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்கு வழங்க வேண்டுமென படையினர் கோரியிருக்கின்ற போது அதற்கு எவ்வளவு நிதி வேண்டுமென, ஆராய்ந்து அதனை அரசாங்கம் வழங்க வேண்டுமென்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொல்லியிருக்கின்றனர். 

படையினர் வசமிருக்கின்ற காணிகளில் எங்கள் மக்கள் தான் வேலை செய்கின்றனர். அங்கு செய்யப்படுகின்ற விவசாய உற்பத்திப் பொருட்களை குறிப்பாக மரக்கறி வகைகளை இங்குள்ள சந்தைகளில் விற்பதில்லை. அவர்கள் தங்கள் தேவைகளுக்காகவே அதனைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனாலும், இராணுவத்தினரால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவது தொடர்பில், வடக்கு மாகாண சபையில் இருந்தபோதே, நான் பேசியிருக்கின்றேன். அத்தோடு, விவசாய அமைச்சரையும் சந்தித்து அண்மையில் பேசியிருக்கின்றேன். மேலும், படையின் மேற்கொள்ளும் விவசாயத்தையும் பார்த்திருக்கின்றேன்.

ஆனால், அவர்கள் செய்கின்ற உற்பத்திகள் இங்குள்ள சந்தைகளுக்கு வரப்போறதில்லை. அத்தோடு, அவர்கள் தொடர்ந்தும் அந்த உற்பத்திகளைச் செய்ய முடியாது. ஏனெனில், மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்பட வேண்டுமென, ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

அதற்கமைய காணிகளும் விடுவிக்கப்பட இருக்கின்றது. அது வரையில் அந்தக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்தாலும் பரவாயில்லை. ஏனெனில் மக்களிடம் அக் காணிகள் கையளிக்கப்படும் போது அந்தக் காணிகள் வளப்படுத்திய காணிகளாக விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். ஆகவே இதன் பயன் மக்களையே சென்றடைய இருக்கின்றது.

இதேவேளை, மருதனார்மடம் மற்றும் திருநெல்வேலி சந்தைகளில் இராணுவத்தினரின் வாகனங்களில் இராணுவச் சீருடையுடன் வந்தே இராணுவத்தினர் மரக்கறிகளை விற்பனை செய்வதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தபோது, அதனை மறுதலித்த அங்கஜன் இராமநாதன், இதற்கான ஆதாரம் இருந்தால், உடனடியாக அதனைத் தான் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின் முடிவில், இந்த விடயம் தொடர்பில் மாவட்ட இராணுவத் தளபதியுடனும் தொலைபேசியில் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X