2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பால் யாழில் களேபரம்

Gavitha   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன்

நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் நிலஅளவை நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனின் அலுவலகம், நேற்று திங்கட்கிழமை முற்றுகையிடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருடைய அலுவலகம் முற்றுகையிடப்பட்டு வடமாகாண சபை உறுப்பினர்களால் திங்கட்கிழமை (11)மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், விந்தன் கனகரத்தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருடன் காணி உரிமையாளர்களும் இணைந்தே இந்த  முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

மாவட்டச் செயலாளரை எவரும் சந்திக்க முடியாதவாறும் மாவட்டச் செயலாளர், தனது அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாதவாறும் நேற்று மதியம் 12 மணி வரையில் இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, அலுவலகத்தின் முன் கதவை அடைத்தவாறு, போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்த போதிலும், பின் வாசல் வழியாக, மாவட்டச் செயலாளர் தனது  அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாகாண சபை உறுப்பினர்களைக் கைது செய்யும் நோக்குடன் அங்கு பொலிஸாரும் குவிந்திருந்தனர். மாவட்;டச் செயலகத்துக்குள் கைவிலங்குகளுடன் பொலிஸார் சென்ற போதிலும், போராட்டம் கைவிடப்பட்டமையால், எவரும் கைது செய்யப்படவில்லை.

இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், 'இனிவரும் காலங்களில் இவ்வாறு காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கான நிலஅளவைகள் மேற்கொள்ளப்படுமாயின், இவ்வாறானப் போராட்டங்கள் தொடரும். நிலஅளவை மேற்கொள்ளப்படும் இடங்களில் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவோம்' என்றார்.

அத்துடன், 'இவ்வாறு காணி சுவீகரிப்பதை நிறுத்துவதற்கு வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும். படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி உறுதி வழங்கிய பின்னரும், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்வது ஜனாதிபதியின் இரட்டை வேடத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றது' எனவும் அவர் கூறினார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X