2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘இலங்கைத் தமிழரசுக் கட்சி இரத்தக்கறை படிந்த கட்சி’

Editorial   / 2019 மார்ச் 02 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியும், இரத்தக்கறை படிந்த கட்சி தான் என, ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகரிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அங்கு தொடர்ந்துரைத்த அவர், அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சிக்கு மாற்றுக் கருத்துடையவர்களுக்கு இயற்கை மரணமல்ல செயற்கை மரணம் தான் என்றே அக் கட்சியினர் கூறுவார்களெனவும் ஏனெனில் அந்தக் கட்சிக்கு எதிராக ஏதும் சொன்னால் கொல் என்று அல்லது கொலை என்று தான் அர்த்தமாகுமெனவும் தெரிவித்தார்.

இது அந்தக் கட்சியின் தலைவராக அமிர்தலிங்கம் காலத்தில் நடந்திருக்கின்றனவெனத் தெரிவித்த அவர், இவ்வாறு அக்கட்சி மீது பல விடயங்கள் இருக்கின்றனவெனவும் கூறினார்.

சொத்து மதிப்பு வெளியிடும் செயற்பாடு:

அத்துடன், ஆட்சி மாற்றத்தின் போதும், வரவு செலவுத் திட்டத்தின் போதும் பல கோடிக்கணக்கான பணம் கைமாற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை மூடி மறைப்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு வெளியிடும் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பை வெளியிடுமாறு கோரப்பட்டதற்கமைய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மதிப்பை வெளியிட்டிருக்கின்றனரெனத் தெரிவித்த அவர், அவ்வாறு தமது சொத்து மதிப்பை வெளியிட்ட உறுப்பினர்களின் சொத்து விவரத்தைப் பார்க்கின்ற போது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போலவே உள்ளதெனவும் கூறினார்.

உண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரம், நாடாளுமன்றத்திலும் தேர்தல் திணைக்களத்திலும் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தனது சொத்துகள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் தேர்தல் திணைக்களத்திலும் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், தனது சொத்து விவரத்தை பார்க்க விரும்புவோர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கூறினார்.

வடக்கில் பௌத்த மாநாடு:

மேலும், வடக்கில், பௌத்த மாநாட்டை நடத்தவுள்ளதாக ஆளுநர் கூறியிருக்கின்றமையானது அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதானது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊத்தவது போன்றதாகவே அமையுமென, அவர் தெரிவித்தார்.

அவ்வாறு இங்கு அந்த மாநாட்டை நடாத்துவதில் தனக்கும் இணக்கப்பாடில்லையெனவும் அவர் கூறினார்.

தமிழர்கள் பிரச்சினை:

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் முதல் அரசியல் பிரச்சனைகளென அனைத்தையும் தீர்த்து வைப்போமெனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சனையையும் தீர்க்கவில்லைடியனத் தெரிவித்த அவர், அதே போன்றே இந்த ஆட்சி வந்தால் அனைத்தையும் தீர்ப்போமெனக் கூறியவர்களும் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.

இங்குள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க விரும்பவில்லையெனக் குற்றஞ்சாட்டிய அவர், அதனைத் தீராப் பிரச்சனைகளாகவே வைத்திருக்க அவர்கள் விரும்புவதாகவும் அதனாலையே தான் அவர்களில் இருந்து வேறுபடுவதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X