2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இளைய சமூகத்தவர்கள் மத்தியில் ஆன்மீக நாட்டம் குறைந்து வருகின்றது

Gavitha   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

'தற்காலத்தில் எமது இளைய சமூகத்தவர்கள் மத்தியில் ஆன்மீக நாட்டம் குறைந்து வருவது கவலைக்குரிய விடயமாகும். அத்தோடு சமய நம்பிக்கை இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது' என்று யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் தலைமையில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற  வாணி விழா மற்றும் முதியோர் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'சமூகத்திலுள்ள மூத்தோர்களை மதிக்காமை ஏனையவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படுகின்ற தன்மை என்பன தற்போது அதிகரித்து வருகின்றன. அத்தோடு யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயங்களிலும் நிர்வாக ரீதியான முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. மற்றவர்களினை அனுசரித்துப் போகும் தன்மை மிகவும் குறைந்து வருகின்றது.

தற்காலத்தில் எமது இளைய சமூகத்தவர்கள் மத்தியில் ஆன்மீக நாட்டம் குறைந்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.

அத்தோடு சமய நம்பிக்கை இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது.நாங்கள் விடாமுயற்சியுடன் தூய மனதுடன் செய்கின்ற எந்தப் பணியும் வெற்றிகரமாக நிறைவடையும். எங்களுக்கு மேலான சக்தி தான் எங்களை இந்த விடயத்தில் வழிப்படுத்துகின்றது. எப்படியும் வாழலாம் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். சிறுவயதிலிருந்து ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஆன்மீக நாட்டம் ஊட்டப்பட வேண்டும். எமது சமூகத்தில் தற்காலத்தில் ஆன்மீகத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து வருகின்றது' என்று அவர் கூறினார்.

'அறிவை விட அனுபவம் முக்கியமானது என்பதை நாம் கருத்தில் கொண்டு மூத்தோர்களை மதித்து நடக்க வேண்டும். அறிவும் அனுபவமும் சேரும் போது ஆரோக்கியமானதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும். நாங்கள் செய்கின்ற எந்தச் செயலுக்கும் எதிர்வினை உண்டு. நல்வினை செய்கின்ற போது நல்ல விளைவுகளும் தீவினை செய்கின்ற போது தீய விளைவுகளும் எமக்கு கிடைக்ககின்றது.எனவே நல்ல காரியங்களினை ஆற்றி சமய நம்பிக்கை நற்பண்புகள் உள்ளவர்களாக நம்முடைய வாழ்வினை நாம் கட்டியெழுப்ப வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்'.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X