2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இளவாலை பொலிஸ் நிலையம் விரைவில் சொந்தக் கட்டடத்தில்

Niroshini   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பண்டத்தரிப்பு பெரியவிளான் பகுதியில் இளவாலை பொலிஸ் நிலையத்துக்கான நிரந்தரக் கட்டடம் அமைக்கும் பணியானது முடிவடையும் நிலையில் இருப்பதால் எதிர்வரும் மே மாதத்துக்குள் இளவாலைப் பொலிஸ் நிலையம் சொந்தக் கட்டடத்தில் இயங்கும் என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரியவிளான் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியானது 5.5 மில்லியன் ரூபாய் பெறுமதிக்கு கொள்முதல் செய்யப்பட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பொலிஸ் நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பொலிஸ் நிலையத்துடன் சேர்ந்து சமையல் பிரிவு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்குமிட வசதி, மலசலகூடங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

இளவாலை பொலிஸ் நிலையம் தற்போது அமைந்துள்ள தனியார் காணியை விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

13 வீடுகள் 8 விவசாய நிலங்களை உள்ளடக்கிய 50 பரப்பு காணியை உள்ளடக்கிய காணியை 1992ஆம் ஆண்டு இளவாலைப் பொலிஸ் நிலையத்துக்காக சுவீகரித்து, வைத்திருந்த பொலிஸார் அதனை மீண்டும் உரிமையாளர்களிடம் வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டங்கள் செய்தும் காணியை விடுவிக்க முடியாத காணி உரிமையாளர்கள் 11 பேரும் சேர்ந்து, மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்குத் தாக்கல் செய்தனர். காணியை உடன் விடுவிக்குமாறு நீதிவான் பணித்திருந்த நிலையில், காணியை உரிமையாளர்களுக்கு வழங்குவதாக பொலிஸ் தரப்பால் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X