2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஊமைப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியோருக்கு சிறை தண்டனை

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதடியைச் சேர்ந்த வாய்பேச முடியாத மற்றும் காது கேளாத 25 வயது நிரம்பிய பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நால்வருக்கு, 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நட்டஈடு ஆகியவற்றை வழங்குமாறும் இன்று புதன்கிழமை, உத்தரவிட்டார்.

குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட தம்பிராஜா ரஜினிகாந்த், பரமு தினேஸ்குமார், சிவலை கனகரத்தினம், நாகராஜா இரகுநாதன் ஆகியோருக்கே, இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   

தனது அம்மம்மாவுடன் வசித்து வந்த குறித்த பெண்ணை, கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், நால்வர் அடங்கிய கும்பலொன்று, கடத்திச் சென்று பாலியல்
வல்லுறவுக்குட்படுத்தியுள்ளது.   

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நான்கு நபர்களையும் 2009ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி கைது செய்ததுடன், அவர்களுக்கெதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.   

அங்கு, விசாரணைகள் இடம்பெற்று கொண்டிருந்த நிலையில், அவ்வழக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.   

இந்நிலையில், சைகை மொழி தெரிந்தவர் ஊடாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியங்கள், மன்றில் பதிவு செய்யப்பட்டன.   
சம்பவ தினத்தன்று, இரவு 7.30 மணியளவில் தன்னை நான்கு பேர் பிடித்து இழுத்துச் சென்று, தனது வாயைக் கறுப்பு துணியால் கட்டியதுடன், கைகளையும் பின்புறமாக கட்டியதாகவும் தெரிவித்தார்.   

பின்னர், அங்கிருந்த பற்றைக் காடு ஒன்றுக்குள் இழுத்துச் சென்று, தன்னை நால்வரும் வன்புணர்ந்துவிட்டு, பின்னர் தன்னை வீட்டுக்கு அருகில் போட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் இப்பெண் சாட்சியமளிக்கும்போது தெரிவித்தார்.   

இதையடுத்து, பொலிஸார் தமது சாட்சியத்தில், சம்பவம் இடம்பெற்ற இடம், பற்றைக்காடு எனவும் 21ஆம் திகதி இரவு காணாமற்போனவர, மறுநாள் 22ஆம் திகதி காலையில், பாழடைந்த கட்டடம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.   

இதையடுத்து, குறித்த நால்வரையும் குற்றவாளிகளாக இனங்கண்ட நீதிபதி, அவர்களுக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததுடன், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நட்டஈடு ஆகியவற்றை வழங்குமாறும் உத்தரவிட்டார்.   

அபராதத் தொகையைக் கட்டத்தவறினால் 2 மாதங்களும், நட்டஈடு கட்டத்தவறினால் 2 வருடங்களும், மேலதிக சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.   

இதேவேளை, இராணுவப் புலனாய்வாளர்கள், தம்மை 22ஆம் திகதி இராணுவ முகாமுக்கு அழைத்து, "நீங்க நால்வரும் தானே அந்த பெண்ணை கடத்தி வன்புணர்வு புரிந்தீர்கள்?" எனக்கேட்டுத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X