2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

குடிநீர் பாதுகாப்பில்லை

Niroshini   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயனில் குடிநீர்த் திட்டமூடாக விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பற்ற முறையில் விநியோகிக்கப்படுவதாக அக்கராயன் மக்கள், கிராம அலுவலரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் அக்கராயனில் 2011ஆம் ஆண்டில் 16 மில்லியன் ரூபாய் செலவில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர்த் திட்டமொன்று தொடங்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வழங்கல் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பற்ற முறையில் வழங்கப்படுவதாகவும் குரங்குகள், பறவைகளின் எச்சம் குடிநீருடன் கலப்பதாகவும் மக்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாடு தொடர்பாக அக்கராயன் கிராம அலுவலர் ப.சபாரட்ணத்திடம் கேட்டபோது,

அக்கராயன் குடிநீர்த் தாங்கி அமைந்துள்ள பகுதியில் சிலவேலைகள் முடிக்கப்படாமல் உள்ளன. நீர்த்தாங்கி மூடி, பாதுகாப்பான முறையில் விநியோகிக்கப்படவில்லை. நீர்த்தாங்கி அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பான வேலி வேலைகள் முழுமை பெறவில்லை. அக்கராயன் மத்தி, அணைக்கட்டு வீதி ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்கான குடிநீர் வழங்கல் இன்னமும் இடம்பெறவில்லை. இது தொடர்பாக மக்கள் முறைப்பாடு செய்து வருகின்றனர். மக்களின் முறைப்பாடு தொடர்பாக பிரதேச செயலாளரிடம் தெரிவிக்கவுள்ளேன் என்றார்.  

2011ஆம் ஆண்டில் அக்கராயனுக்கான குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டபோது, அக்கராயன் மகா வித்தியாலயத்தின் காணியிலேயே குடிநீர்த் தாங்கி அமைப்பதற்கான காணி வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் அக்கராயன் மகா வித்தியாலயம், அக்கராயன் ஆரம்ப வித்தியாலயம் என்பவற்றுக்கு குடிநீர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே காணி வழங்கப்பட்டது.

ஆனால், இரு பாடசாலைகளுக்கும் இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக 1,000 வரையான மாணவர்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். அக்கராயன் குடிநீர்த் திட்டம் சிறந்தமுறையில் மக்களின் பயன்பாட்டுக்காக இயங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X