2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தில் பாரியளவு முறைகேடுகள்

Princiya Dixci   / 2016 ஜனவரி 30 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பாரியளவு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதற்கும் ஆணையாளருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் தனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையின் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டம் விவசாய மாவட்டமாக இருக்கின்ற போதும், இங்குள்ள கமக்கார அமைப்புக்கள் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படுவதில்லை எனவும், கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழுள்ள கமநல சேவை நிலையங்கள் விவசாயிகளுக்கு பாரபட்சம் காட்டுவதாக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சுட்டிக்காட்டினார்.
இதனை ஏற்றுக்கொண்ட விவசாய அமைச்சர், முறைகேடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் தனக்கு கிடைத்துள்ளதாகக் கூறினார்.

இந்திய அரசினால் விவசாயிகளின் தேவைகளுக்காக வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் அனைத்தையும், விவசாயிகளின் தேவை தவிர்ந்து ஏனைய தேவைகளுக்கு தனிப்பட்ட தேவைகளுக்கு பாவித்து அவற்றை பழுதடையச் செய்து, இன்று எதனையும் பயன்படுத்த முடியாத நிலையில் மாவட்டத்திலுள்ள கமநல சேவை நிலையங்களில் கிடக்கின்றன.

இதேவேளை, சுமார் 200 கிலோ எடையுள்ள 3 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள சுழல் கலப்பை திருட்டுப் போய்விட்டது எனச் சாதாரணமாகச் சொல்கின்றனர். திருட்டுப் போய் ஒரு வருடத்தின் பின்னர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த காவல்களுக்கும் மத்தியில் திருட்டுப்போனமை ஆச்சரியமாகவுள்ளது. இதேபோல் ஒரு உழவு இயந்திரத்தின் பெட்டியும் காணாமற்போயுள்ளது.

கமநல அபிவிருத்தி திணைக்களம் மத்திய அரசின் கீழ் வருவதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X