2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கெஹெலிய வாக்குமூலம் அளிக்கவில்லை

Thipaan   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

2011ஆம் ஆண்டு காணாமற்போன, முன்னணி சோசலிசக் கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணை தொடர்பில், யாழ்;ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்ட முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை.

நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் நேற்று வருகை தராத காரணத்தினால், இந்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதிக்கு நீதவான் சி.சதீஸ்கரன் ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் ஆஜராகி வாக்குமூலமளிக்குமாறு கெஹெலியவுக்கு நீதிமன்ற அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர் நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்காத காரணத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதியன்று, யாழ்ப்பாண நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணையின் பிரகாரம், நேற்றுப் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான அவர், 'வழக்குக்கு அழைத்த தருணங்களில், வேறு நீதிமன்றங்களில் இடம்பெற்ற வழக்குகளில் கலந்துகொண்டமையால் இந்த வழக்கு விசாரணையில் கலந்துகொள்ள முடியவில்லையென' தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 இதனையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நீதவான் சி.சதீஸ்கரன், இரத்துச் செய்தார்.

லலித், குகன் ஆகியோர் காணமற்போன சில நாட்களுக்கு பின்னர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கருத்துரைத்திருந்த கெஹெலிய, 'அவ்விருவரும் கடத்தப்படவில்லை, பொலிஸாரின் விசாரணையில் இருக்கின்றனர். விசாரணை முடிந்த பின்னர் விடுவிக்கப்படுவார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் வாக்குமூலமளிக்கவே கெஹெலிய நீதமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி, முன்னணி சோசலிசக் கட்சியைச் சேர்ந்த லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் மோட்டார் வண்டியில் சென்றபோது காணாமல் போயிருந்தனர். அவர்கள் பயணித்த மோட்டார் வண்டி கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டது. அவர்கள் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள், யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நடத்தப்படும் என, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்பட்டு, வழக்கு விசாரணை தற்போது யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X