2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

படைகளின் வசமுள்ள மக்களின் காணிகளை, டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கமைய, யாழ். மாவட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு அவர்கள் பணம் தேவையென்று கோரியிருப்பதால், அதனை வழங்க வேண்டுமென்று அரசாங்கத்தை தாமும் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் ஆகியன தொடர்பில் ஆராய்வதற்கான உயர் மட்டக் கூட்டம், மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று (16) மாலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் ​தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் மாவட்டத்திலே தனியார் காணி, அரச காணிகளில் விடுவிக்கப்பட்டவை எவை இன்னமும் விடுவிக்கப்பட இருப்பவை குறித்து கலந்துரையாடப்பட்டது.

“ஒவ்வொரு பிரதேச அலுவலர் பிரிவிலும் இரானுவம், கடற்படை, பொலிஸாரிடம் இருக்கும் நிலங்களளை வகையாகப் பிரித்து நாங்கள் பார்த்தோம்.

“அதில் கடந்த தடவை இருந்த தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்த போது, இராணுவத்தினராலே பல காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருப்பதை கண்டிருக்கின்றோம். கடற்படையினர் இதுவரைக்கும் விடுவித்தது மிக மிக சொற்ப அளவிலான இடங்களைத் தான்.

“ஆகவே, கடற்படைத் தளபதியிடத்தே இன்றைக்கு எடுக்கப்பட்ட தரவுகள் எல்லாவற்றையும் நாங்கள் அவரிடம் கொடுத்து மிக விரைவாக இந்தக் காணிகளை விடுவிக்கின்ற அவர்களுடைய நேர அட்டவணையை தெளிவாக எங்களுக்கு கொடுக்குமாறு கேட்டிருக்கின்றோம்.

“இங்கு இராணுவத்தினர் ஏராளமான காணிகளை விடுவித்திருந்தாலும், இன்னமும் விடுவிக்கப்படுவதற்கு பல ஏக்கர் காணிகள் இருக்கின்றன. அதிலே பல இடங்களிலே பல காணிகளை தாங்கள் விடுவிப்பதற்கு முடிவெடுத்து விட்டதாகச் சொன்னார்கள்.

“ஆனால், அதனை விடுவிப்பதில் இரண்டு விடயங்களைச் சொன்னார்கள். அதாவது, அங்கே இருக்கிற இராணுவத்தினரை இன்னொரு இடத்துக்கு மாற்றுவதற்கு மாற்றீடான காணிகள் எங்கே என்பதனைக் கண்டுபிடிப்பதும், தங்களுடைய அந்த இடமாற்றத்துக்குத் தேவையான பணமும் புதிய கட்டடங்களுக்குத் தேவையான பணமும் அரசாங்கம் தங்களுக்கு கொடுக்க வேண்டிய தேவை தொடர்பிலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

“ஆகவே, இந்த இரண்டும் சரி வந்தால் தாங்கள் இதிலே கூடுதலான பிரதேசங்களில் இருந்து வெளியேறுவதற்கு, ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

“அதே நோரம் பொலிஸாரோடு பேசிய போது, பல இடங்களிலே புதிய பொலிஸ் நிலையங்களை அமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதில் உதாரணத்துக்கு அனலை தீவுப் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் அங்கே பொலிஸ் நிலையம் இல்லை.

“இதனால் பலர் நீதிமன்றங்களினாலே கைதுசெய்யப்படுகின்ற அல்லது பிடிவிறாந்தோடு இருக்கிறவர்கள். அனலை தீவுப் பிரதேசத்தில் ஒளித்திருக்கின்றார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஏனென்றால், அங்கே பொலிஸ் நிலையம் இல்லை. ஆகவே, இராணுவம், கடற்படைப் பிரதேசங்களில் இருந்து அவர்கள் வெளியேறுகின்ற போது அப்பிரதேசங்களில் சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், பொலிஸார் தேவையாக இருக்கின்றது.

“மேலும், பொலிஸ் நிலையங்கள் அமைப்பதிலே அங்கேயும் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. அதாவது முதலாவதாக அந்தக் காணிகளை வாங்குவது அல்லது சுவீகரிப்பது அதற்கான பணம் தேவை. இதில் இரண்டாவது எடுத்துக் கொடுக்கப்பட்ட பிறகும் கூட பொலிஸ் நிலையங்களைக் கட்டுவதற்கு பணம் விடுவிக்கப்பட வேண்டி இருக்கின்றது.

“யாழ்ப்பாணம் பிரதேசத்திலே சில பொலிஸ் நிலையங்கள் 2020, 2022ஆம் ஆண்டுகளிலே கட்டுவதற்காக நேர அட்டவணை போடப்பட்டுள்ளது. ஆகவே இதிலே இராணுவத்தையும் பொலிஸாரையும் நாங்கள் பார்க்கின்ற போது, இவர்கள் மாற்று இடங்களுக்குச் செல்வதற்கும் பொலிஸ் புதிய இடங்களை உருவாக்குவதற்கும் மிகவும் முக்கியமாக அரசாங்கம் பணம் விடுவிக்கப்படாமல் இருப்பது ஒரு தடையாக இருக்கிறதென்ற கருத்து இங்கே சொல்லப்பட்டிருக்கின்றது.

“ஆகவே இது சம்பந்தமாக நாங்கள் அரசாங்கத்துடன் பேச வேண்டியதாக இருக்கின்றது. நாங்கள் மீள்குடியேற்றத்துக்கு மீள் கட்டுமாணத்துக்கு பணம் போதாது எங்களுடைய மக்கள் திரும்பச் சென்று குடியேற வேண்டும் என்கின்ற தேவை இருக்கிறதால், அதற்கு அரசாங்கம் பணம் ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

“அதே வேளை, நிலைமை சுமூகமாவதற்கும் மக்களுடைய காணிகள் திரும்பக் கிடைப்பதற்கும் அதிலும் நிறையப் பணம் அரசாங்கம் செலவிட வேண்டியதாக இருக்கின்றது. ஆகவே, இந்த வருட நிதி ஒதுக்கீட்டில் இந்த விடயங்களைக் கவனிக்குமாறு நாங்களும் அரசாங்கத்திடம் கேட்க வேண்டியதாக இருக்கின்றது.

“குறிப்பாக, இந்தத் தீர்மானங்கள் தான் இப்போது எடுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் 22ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் இதே இடத்திலே ஒரு கூட்டத்துக்கு அழைத்திருக்கின்றார். கடந்த முறை வட, கிழக்கு ஜனாதிபதி செயலணிக் கூட்டத்திலே இப்படியான ஒரு கூட்டத்தைக் கூட்டுமாறு கிழக்கு, வடக்கு ஆகிய இரண்டு மாகாணங்களின் ஆளுநருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

“அதனூடாக விடுவிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பான தரவுகளை எடுத்து அந்தப் பணிகளை உற்சாகப்படுத்துமாறு ஜனாதிபதி கூறியிருந்தார். ஆகவே, இன்றைய கூட்டத்திலே எங்களால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு 22ஆம் திகதி வருகின்ற போது விசேடமாக கடற்படையினர் அதற்கான பதில்களையும் நேர அட்டவணைகளையும் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

“அதற்குப் பிறகு தான் நவம்பர் 8ஆம் திகதி ஜனாதிபதி செயலணி மீண்டும் கூடுகின்ற போது, அதில் முன்னேற்றம் எவ்வளவு ஏற்பட்டிருக்கின்றதென்பதைச் சொல்லக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி சென்ற தடவை ஐனாதிபதி ஒரு பணிப்புரையைக் கொடுத்து டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமெனச் சொன்னதாலே தாங்கள் துரிதமாக அந் நேர அட்டவணைக்குள்ளாகச் செயற்படும் வண்ணம் பல நடவடிக்கைகைளை முன்னெடுப்பதாகச் சொன்னார்.

“ஆகவே, அப்படியொரு காலக்கெடு ஐனாதிபதி கொடுத்திருக்கிற காரணத்தினாலே, அவர்கள் தங்களது முன்னேற்றத்தை வெகு விரைவாக அறிவிப்பதாகவும் அடுத்த செயலணிக் கூட்டத்திலே தாங்கள் எவ்வளவு தூரம் அதிலே முன்னேற்றமடைந்திருக்கிறோம்.

“எப்படியாக இருந்தால், டிசெம்பர் 31க்கு முன்னதாக அனைத்து தனியார் காணிகளையும் விடவிப்பதற்கான தங்களது நடவடிக்கை என்ன என்பதையும் அறிவிப்பதாகச் சொல்லியிருக்கின்றார்” என, சுமந்திரன் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X