2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘குறிப்பிட்டதொரு மதத்தை முதன்மைப்படுத்தும் செயலை ஏற்கமுடியாது’

Editorial   / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

“நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்லர். எனினும் குறிப்பிட்டவொரு மதத்தை முதன்மைப்படுத்தும் செயலை ஏற்றுக்கொள்ளமுடியாதென” வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் விகாரை அமைப்பதுக்கான நடவடிக்கைகளை மாவட்ட செயலர் மேற்கொண்டு வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக ப.சத்தியலிங்கம் இன்று (27) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“இந்த நாட்டில் பிரதானமாக மூன்று மதங்கள் காணப்படுகின்றன. அவரவர் தங்களுடைய மதங்களை பின்பற்றுவதுக்கு உரித்துடையவர்கள். இதைதான் இலங்கையின் அரசியல் சாசனமும் தெளிவாக சொல்கிறது. எனினும் 2009 யுத்தத்துக்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் வாழாத இடங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை தமிழ் மக்கள் மீதான ஒருவகையான அடக்கு முறையாகவே பார்க்கவேண்டியுள்ளது. இதனால்தான் இலங்கையில் புத்த மதத்தை, சிங்கள பௌத்தமாக தமிழ் மக்கள் பார்க்கவேண்டியுள்ளது.

மாவட்ட செயலகமென்பது அரச திணைக்களமாகும். இதில் சேவைகளை பெற எல்லா மதப்பிரிவினரும், எல்லா இனப்பிரிவினரும் நாளாந்தம் வந்து செல்கின்றனர். எனினும் குறிப்பிட்டவொரு மதம்சார்ந்த வழிபாட்டு தலத்தை அமைப்பதானது இனங்களுக்கிடையிலான நல்லிணக்க பொறிமுறையை பாதிக்கும். ஐ.நா சபையிலும் சர்வதேசத்துக்கும் இனநல்லிணக்கம் பற்றி அரசாங்கம் வழங்கும் உறுதிமொழிகளுக்கு எதிரான நிலைப்பாடாகவே இந்த விடயத்தை பார்க்கவேண்டியுள்ளது.

மாவட்ட செயலகத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கான சேவையை திருப்தியுடன் அங்கு பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் வழங்கினாலே போதும். அதுவே இறைவனுக்கு ஆற்றும் பெரும் தொண்டாகும். வவுனியா மாவட்டம் மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழும் மாவட்டமாகும். அதிலும் 80 வீதத்துக்கு மேலாக தமிழ் பேசும் இந்துக்கள் வாழும் மாவட்டமாகும். எனவே இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களிடையே ஏனைய மதங்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் செயற்பாடாக அமையும். இதனை மாவட்டச்செயலர் உடனடியாக கைவிடவேண்டுமென” குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .