2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

‘குளத்தின் நீர் வேகமாக வற்றுகிறது’

Editorial   / 2017 செப்டெம்பர் 03 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி - வன்னேரிக் குளத்தின் பின் பகுதியில் தொடர்கின்ற மணல் அகழ்வின் காரணமாகவே, குளத்தின் நீர், வேகமாக வற்றுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  

1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம், குடியேற்றத் திட்டத்தில் கிராமத்தின் உயிர்நாடியாகக் காணப்படுகின்றது. முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள இக்கிராமத்தில், 363 ஏக்கரில் ஆண்டு தோறும் பெரும்போகப் பயிர்ச்செய்கை இடம்பெற்று வருகின்றது.  

முல்லைத்தீவு - கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளங்களின் வான் வெள்ளம், இக்குளத்தை நிரப்பும். வன்னேரிக்குளத்தில் இருந்து வெளியேறுகின்ற நீர் மண்டைக்கல்லாறு வழியாக பூநகரிக் கடலில் கலக்கின்றது.  

வன்னேரிக் குளத்தையும் தேவன்குளத்தையும் இணைத்து உருவாக்கப்படவுள்ள பெரும் நீர்த்தேக்கத்தின் மூலம், ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள முடியும்.  

வயல் காணி பகிர்ந்தளிக்கப்படாமல் தவிக்கும் ஜெயபுரம் கிராம மக்களுக்கும் உவர்ப் பரம்பலால் வயல் நிலங்களை இழந்துள்ள வன்னேரிக்குள குஞ்சுக்குள கிராம மக்களுக்கும் வயல் நிலம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

இந்நிலையில், கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக, வன்னேரிக்குளத்தின் பின்பகுதியில், பெருமளவில் மணல் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக, குளத்தின் நீர் வேகமாக வற்றுகிறது. 

வன்னேரிக்குளத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வுகளுடன், கிராமத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இறுதியாக நடைபெற்ற சிறுபோக கூட்டத்திலும், வன்னேரிக்குளத்தின் பின்பகுதியில் நடைபெறுகின்ற மணல் அகழ்வை கிராமத்தின் பொதுஅமைப்புகள் சரியான தகவல்களை வழங்கி தடுக்காவிட்டால், எதிர்கால விவசாய நடவடிக்கைகள் பெரும் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் என, நீர்ப்பாசனப் பொறியியலாளரினால் எச்சரிக்கப்பட்ட நிலையிலும், குளத்தின் பின்பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெற்று வருவதாக, அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X