2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘குழப்பங்களால் பாதிக்கப்படுவது நாமே’

Editorial   / 2017 ஜூன் 18 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்  

வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமற்போனோரின் உறவுகளின் போராட்டங்கள், நில மீட்புக்கான போராட்டங்கள் என்பன பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.  

இது குறித்து அவர்கள் ​மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

“எமது போராட்டங்களுக்கு, வடமாகாண சபை உறுப்பினர்கள் பலமாக இருப்பார்கள் என்று நம்பினோம். ஆனால், எம்மால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களே பதவிகளுக்காகவும் சுய இலாபங்களுக்காகவும், செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  

“பல இடங்களில், நூறு நாட்களைத் தாண்டி, காணாமற்போனோர் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு தீர்வுகள் கிடைக்கவில்லை. பூநகரி - இரணைதீவை மீட்பதற்கான போராட்டத்தைத் தொடங்கிய நாம், ஐம்பது நாட்களை நெருங்கிய நிலையிலும், தீர்வுகள் கிடைக்கவில்லை. இதேபோன்று, கேப்பாப்புலவிலும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னாலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.   

“வடமாகாண சபை உறுப்பினர்கள் எல்லோரும் சுய இலாபத்துக்காக செயற்படுவதற்காகவா இவர்களைத் தெரிவு செய்தோம்? எமது போராட்டங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என நினைத்து, தெரிவு செய்தவர்களே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றனர்.  

“எங்களுடைய போராட்டத்தில், நாள்தோறும் நிற்க வேண்டியவர்கள், தங்களுடைய பதவிகளை தக்க வைப்பதற்கு சுய இலாப முயற்சிகளில் ஈடுபடுகிறனர். ஆனால், மக்களாகிய நாம், எமது உறவுகளைத் தேடியும் பூர்வீக நிலங்களை விடுவிப்பதற்கும், வீதிகளில் போராடுகின்றோம். எமக்கான தீர்வுகளை எவருமே வழங்கவில்லை. நல்லாட்சி அரசாங்கமும் எம்மை ஏமாற்றி விட்டது.   

“நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களியுங்கள் என, வலியுறுத்தியவர்களும் எம்மால் உருவாக்கப்பட்ட மாகாண சபைக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வதன் காரணமாக, எமக்கான தீர்வுகளை யார் வழங்குவார்கள் என்று தெரியாமல் வீதியில் தவித்த படி, போராட்டத்தை நடாத்துகின்றோம்” எனத் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X