2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கோவில் புனரமைப்புக்கு நிதி சேகரிப்பு: மறுக்கிறது இராணுவம்

Editorial   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

 

யாழ்ப்பாண மாவட்டத்தில், இந்து கோவில்களைப் புனரமைப்பது உட்பட எந்தவொரு வேலை திட்டத்துக்கும் இராணுவத்தால் நிதி சேகரிக்கப்படவில்லையென, யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பலாலியில் உள்ள பிள்ளையார் கோவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, சீருடை அணிந்த இராணுவத்தினரால், சுன்னாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில், நிதி சேகரிக்கப்படுவதாக, ஊடகங்களில் அண்மையில் செய்தி வெளியாகியது.

இதற்கு மறுப்புத் தெரிவித்து, இன்று (26), யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இந்து கோவில்களைப் புனரமைப்பது உட்பட எந்தவொரு வேலைத் திட்டத்துக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தில், இராணுவத்தால் நிதி சேகரிக்கப்படவிலலையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக, தென்னிலங்கை மக்களிடம் இருந்து கிடைக்கப் பெறுகின்ற நிதி பங்களிப்புகள் மூலமாகவே, யாழ்ப்பாண மாவட்டத்தில், தமது மனிதநேய வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இராணுவத்தினரால் கோவில் புனரமைப்புக்கு, யாழ்ப்பாண மாவட்டத்தில் நிதி சேகரிக்கப்படுவதாக வெளியாகி உள்ள செய்தி தம்மை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், யாழ். மாவட்ட தளபதி என்கிற வகையில், தாம் அறிந்த வரையில், நிச்சயமாக இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடையாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் அந்த மாதிரியான நிதி சேகரிப்புக்கு, தாம் உத்தரவிடவில்லையெனத் தெரிவித்துள்ள அவர், எது எப்படி இருந்தாலும் இராணுவத்தினரின் பெயரைப் பயன்படுத்தி, எவரேனும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்ற பட்சத்தில், உடனடியாக யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தலைமையகத்துக்கு தெரியப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான செய்திகள் கிடைக்கப்பெறுகின்றபோது, இராணுவத்தின் யாழ்ப்பாணக் கட்டளை தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு, செய்தியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி கொள்ளுமாறு, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X