Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
'தேர்தலில் தோற்ற, சிறைத் தண்டனைக்கு இலக்காக வேண்டிய தெற்கிலுள்ள சிலர் என்னை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் வியாபாரத்துக்காவது நான் அவர்களுக்கு பயன்பட்டுள்ளேன் என்பதில் எனக்கு திருப்தி' என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
'தெற்கிலே என்னை இப்பொழுது சித்திரித்துக் காட்டி வருவது என்னைத் தகாத ஒரு மனிதனாக ஏற்பாட்டாளர்கள் மனதில் எடுத்துக் காட்டியிருக்கக் கூடும். நான் வழக்கமாக பேச்சுக்களை எழுதியே வாசிப்பேன்.
என்னைப் பேயாகவும் பூதமாகவுந் தகாத மனிதப் பிறவியாகவும் சித்திரிப்பதற்கு முன்னர் நான் அண்மையிலே பேசிய பேச்சை சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ முறையாகச் சரிவர மொழிபெயர்த்து வாசித்து விட்டு, என்னை விமர்சித்திருந்தால் அதற்கான பதிலைத் தந்திருக்க முடியும்.
ஆனால் நான் சொல்லாததை எல்லாம் சொல்லி என்னை வைவது மனவருத்தத்தைத் தருகின்றது. 1958இல் செனவிரத்ன எனும் ஒரு சிங்களச் சகோதரரை வெட்டித்துண்டு துண்டாக்கி மீன்பெட்டிகளில் அடைத்து அனுப்பியதாக ஒரு கட்டுக் கதை கட்டி விடப்பட்டதால்த்தான் பல தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள். சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட பின்னர்தான் அந்தச் செய்தி பொய் என்று தெரியவந்தது. ஆனால் அழிவு அழிவுதான். கடைசி நேரத்தில் என்னைப் பேச அழைத்ததால் அது பற்றிய முழு விபரங்களையும் என்னால்த் திரட்ட முடியவில்லை.
தார்சி விதாச்சி என்பவரின் 'நுஅநசபநnஉல 58' (58இன் அவசரகாலம்' என்ற நூலில் இது பற்றிய விபரம் அடங்கியுள்ளது. ஆகவே பொய் புரட்டுக்களை நம்பி அநியாயமாக மக்களிடையே பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் வெறுப்புணர்ச்சிகளையும் ஏற்படுத்தாது இருப்போமாக! முக்கியமாக தெற்கில் தேர்தலில் தோற்ற சிலர், சிறைத் தண்டனைக்கு இலக்காக வேண்டிய சிலர் எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் வியாபாரத்துக்காவது நான் அவர்களுக்கு பயன்பட்டுள்ளேன் என்பதில் எனக்குத் திருப்திதான்.
தேசிய விளையாட்டு நிகழ்வுகளில், பல விளையாட்டுக்களை நடத்த எமக்கு வசதிகள் இல்லை. பிறமாகாணங்களில் தான் அவை நடாத்தப்படுகின்றன. வடமாகாணத்தில் தேசிய விளையாட்டு நடைபெறுகின்றது என்று கூறுவது எமக்குப் பெருமை தரும் அதேவேளையில் நீச்சல் போன்ற பல போட்டிகளை எம்மால் நடத்த முடியாதிருப்பதால் மனவேதனை அடைகின்றோம்.
வெகுவிரைவில் வடமாகாணத்திற்குள்ளேயே கிளிநொச்சியில் சகல போட்டிகளும் நடாத்தப்பட்டு தேசிய விளையாட்டு விழா மீண்டும் இங்கு நடைபெற ஜனாதிபதி வழிசமைப்பார் என்று எதிர்பார்க்கின்றேன்.
எமது வேறுபட்ட மக்களை ஒன்று படுத்த விளையாட்டுக்கள் உதவி புரிகின்றன. மொழித் தடங்கல் எம்மைப் பிரிப்பதையும் நாம் காண்கின்றோம். சகோதர மொழியில் பாண்டித்தியம் பெறாததால் பல விடயங்களை நாம் மனம் விட்டு எமது சகோதர இனங்களுடன் பேச முடியாமல் இருக்கின்றது.
இன்று மும்மொழித் தேர்ச்சி ஜனாதிபதியின் அரசாங்கத்தால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
விளையாட்டு வீர வீராங்கனைகள் ஆங்கில மொழித் தேர்ச்சி பெற்றால் ஒருவருக்கொருவர் சரளமாகப் பேசுவது மட்டுமல்ல, உலக அரங்கிலே நடைபெறும் விளையாட்டுக்கள் பற்றிய சகல விடயங்களையும் நாம் அறிந்து கொள்ள அது உதவும். புதிய யுக்திகள், புதிய வழிமுறைகள், புதிய பயிற்சிமுறைகள் போன்றவற்றை உடனேயே அறிந்து கொள்ள ஆங்கில அறிவு உதவி புரியும்.
இப் பகுதியில் விளையாட்டுத்துறைகளில் சிறந்து விளங்குகின்ற பல இளைஞர், யுவதிகள் இருக்கின்ற போதிலும் அவர்கள் தற்கால நவீன யுக்திகளைக் கையாண்டு விளையாட்டுத் துறைகளில் முன்னேறுவதற்குரிய உள்ளக விளையாட்டு அரங்குகள், விளையாட்டு உபகரணங்கள் என்பன இல்லாத காரணத்தினால் விளையாட்டுகளில் நவீன விளையாட்டு முறைமைகளையும் உரிய பயிற்சிகளையும் சரியான பயிற்சித் தளங்களில் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர்.
அத்துடன் கடந்த கால நீண்ட போராட்டங்களும் அதன் விளைவாக வீடுகளில் முடங்கிக் கிடந்து காலத்தை கழித்து வந்ததும் இவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விட்டது. இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் ஒரு நீச்சல் தடாகத்தை உள்ளடக்கிய உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைத்துக் கொடுப்பதன் மூலம் இவர்களை நீச்சல், கரப்பந்தாட்டம் போன்ற உள்ளக நிகழ்வுகளில் மேலும் தேர்ச்சி பெற்று போட்டிகளில் அச்ச உணர்வுகள் இன்றி கலந்து கொள்ள வழிவகுக்கும்.
எனவே இந்த 42வது வருடாந்த விளையாட்டுப் போட்டிகளின் நினைவுப் பரிசிலாக வடபகுதி விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் தடாகம் உள்ளடங்கிய ஒரு உள்ளக விளையாட்டு மைதானமான கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தை விரைவில் அமைத்துத் தருவதற்காக வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கின்றேன்.
உபசபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால எமக்கு ஒரு கிரிக்கட் மைதானம் ஒன்றை அமைத்துத் தரப்போவதாக அறிவித்துள்ளார்' என, அவர் மேலும் கூறினார்.
50 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
7 hours ago