2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சந்தேகநபர் நீதிமன்றிலிருந்து தப்பிச்சென்ற நிலையில் மீண்டும் கைது

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 08 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் சந்தேகநபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்து நேற்று (07) நீதிமன்றுக்கு அழைத்து வந்திருந்தனர்.

தம்மால் அழைத்து வரப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களிடம் பொலிஸார் பாரப்படுத்திவிட்டு மன்றினுள் சென்றிருந்தனர்.

அந்நிலையில், குறித்த சந்தேக நபரின் பிறிதொரு வழக்கினை விசாரணைக்கு எடுக்கக் கோரி அவரது சட்டத்தரணி நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அந்த வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவானால் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் அவ்வழக்கில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அதனை அடுத்து குறித்த நபர் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாது நீதிமன்றை விட்டு வெளியேறி தப்பி சென்றுள்ளார்.

அதன் பின்னர் ஹெரோயின் உடமையில் வைத்திருந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரை மன்றில் அழைத்த போது, சந்தேக நபர் நீதிமன்றை விட்டு தப்பி சென்றமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் சுதாகரித்த பொலிஸார் குறித்த விடயத்தை நீதிவானின் கவனத்துக்கு கொண்டு சென்று பிடியாணை உத்தரவினை பெற்று சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து மீண்டும் மாலை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினார்கள்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரை 14 நாட்களுக்கு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என மன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான் 7 நாட்களுக்கு சந்தேகநபரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X