2025 மே 22, வியாழக்கிழமை

‘சபையின் மாண்பைப் பேண வேண்டும்’

Editorial   / 2018 மே 08 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

“மாநகர சபையின் மாண்பைப் பேணும் வகையில் சபையில் எழுந்து நின்று கருத்துக்களை தெரிவிக்குமாறு” யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆனோல்ட், முன்னாள் மாநகர மேயரும் தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜாவிடம் கண்டனம் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் 2 ஆவது அமர்வு இன்று (08) யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் மேயர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது, கடந்த அமர்வின் கூட்ட அறிக்கை உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் சில விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என குறித்த உறுப்பினர் தெரிவித்த போது, அவரின் கருத்துக்கு ஆதரவாக முன்னாள் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தனது கருத்தை தனது இருக்கையில் அமர்ந்தவாறு தெரிவித்தார்.

அதன்போது, “சபையின் மாண்பை மதிக்கும் வகையில் எழுந்து நின்று கருத்துக்களை முன்வைக்குமாறு” மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இதனையடுத்து தெரிவித்தார்.

“காலில் சத்திரசிகிச்சை மேற்கொண்டமையினால் அதிக நேரம் எழுந்து நின்று கதைக்க முடியாதென்றும், தனது மருத்துவ அறிக்கையினை சமர்ப்பிப்பதாகவும்” யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

இதன்போது, “அவ்வாறு கருத்து தெரிவிக்க வேண்டுமாயின், சபையில் மருத்துவ அறிக்கையினை முறையாக சமர்ப்பித்து சபையின் அனுமதியை உரிய முறையில் பெற்ற பின்னர், இருக்கையில் அமர்ந்தவாறு கருத்துக்களை தெரிவிக்க முடியும். ஆனால், முறையான வகையில், மருத்துவ அறிக்கையினை சமர்ப்பிக்காது, சபையின் மாண்பினை மதிக்காது, இருக்கையில் அமர்ந்தவாறு கருத்துக்களை முன்வைப்பது தவறு” என மேயர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து “அடுத்த கூட்டத்தின் போது, மருத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பதாக” யோகேஸ்வரி பற்குணராஜா சபையில் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X