Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 23 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த்தை பிணையில் செல்ல அனுமதி வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று (23) கட்டளை வழங்கியது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் சுதர்சிங் விஜயகாந்த்துக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ள நிலையிலேயே இந்தக் கட்டளை இன்று வழங்கப்பட்டது.
2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதுக்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகைகள் சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டன. அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் 4 பேரும் ஆட் பிணையில் விடுவிக்கப்பட்டனர். விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேர் மீது 116 பவுண் நகைகளைத் திருடியமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேகநபர்கள் நால்வர் மீதான 2 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. 3 குற்றவாளிகளுக்கான தண்டனைத் தீர்ப்பை 2018 மார்ச் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் வழங்கினார். எனினும் ஒரு குற்றவாளி தலைமறைவாகியுள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன், அதே குற்றத்துக்கு மேலும் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன், குற்றவாளிகள் மூவரும் தலா 7 லட்சம் ரூபாய் இழப்பீட்டை நகையின் உரிமையாளருக்கு வழங்கவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் சார்பில் அவரது சட்டத்தரணி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்தார்.
தண்டனைக் கைதி சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் அவரைப் பிணையில் விடுவிக்குமாறு விஜயகாந்த் சார்பில் அவரது சட்டத்தரணி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2018ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் திகதி விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் நிராகரித்தார்.
இந்தநிலையில் விஜயகாந்த் சார்பில் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்ட பிணை விண்ணப்பம் மீதான கட்டளையை சீராய்வு செய்யும் மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்தது. சீராய்வு மனு மீதான கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று வழங்கினார்.
தண்டனைக் கைதியின் மேன்முறையீட்டு மனு மீதான பிணை விண்ணப்பத்தை நிராகரித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை நிராகரித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளையிட்டது. மேன்முறையீட்டாளரை நீதிவான் நீதிமன்றின் ஆரம்ப பிணை முறியில் விடுவிக்குமாறும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago