2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தேசிய பாதுகாப்புக்கும் தமிழர்களின் காணிகளுக்கும் 'முடிச்சுப் போடாதீர்கள்'

George   / 2017 மே 10 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“யுத்தம் நிலவிய காலப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்கென கையகப்படுத்தப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் மக்களின் காணிகளும், தேசிய பாதுகாப்புக்கும் இடையில் எவ்விதமான தொடர்புகளும் இல்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

“தேசிய பாதுகாப்புடன் எமது மக்களது காணி, நிலங்களைத் தொடர்புபடுத்தி இவ்வாறான  கருத்துக்களைக் கூறி, எமது மக்களது சொந்த காணி, நிலங்களை தொடர்ந்து முடக்கி வைத்திருப்பதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, “யுத்தம் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, பல வருடங்கள் கழிந்துள்ள நிலையில், மீண்டும் இந்த நாட்டில் யுத்தமொன்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நான் நம்பவில்லை.

சுயலாப அரசியல் மற்றும் இனவாதம் கருதி ஒரு சிலர் இந்த நாட்டில் மீண்டும் யுத்தமொன்று வருமென கூறி வருகின்றனர் என்பதற்காக எமது மக்களின் காணி, நிலங்களை அதற்கு காவு கொடுக்க முடியாது. 

எமது மக்கள் வாழ்வதற்காகவும், தங்களது வாழ்வாதாரங்களை முன்னெடுப்பதற்காகவுமே தமது காணிகளை கோரி போராடி வருகின்றனர். இந்த காணிகள் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. எமது மக்களது வாழ்க்கையுடன் உணர்வு ரீதியாகப் பின்னிப் பிணைந்தவை.

எனவே, இவற்றை எமது மக்களுக்கென விடுவித்து, பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்ற அம் மக்களை நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டியது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

தேசிய பாதுகாப்பு கருதி படைகள் அங்கு நிலைகொள்ள வேண்டுமாயின், அதற்கேற்ப, அவ்வப் பகுதிகளின் மக்கள் தொகைக்கும், இன விகிதாசாரத்துக்கும் ஏற்ற வகையில் படைகள் நிலைகொள்வதற்கு பொருளாதார வளங்கள் குன்றிய, அரசாங்க தரிசு நிலங்கள் பெருந்தொகையில் உள்ளன அவற்றைப் பயன்படுத்த முன்வர வேண்டும். 

எமது மக்களின் சொந்த காணிக்கும் தேசிய பாதுகாப்புக்கும் முடிச்சுப் போட்டுக் கொண்டு, காலத்தை இழுத்தடிக்கக் கூடாது.

மக்களது பிரச்சினைகள் எந்தளவுக்கு சுமுகமாகத் தீர்க்கப்படுகின்றவோ, அந்தளவுக்கு விரைவாக இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் உட்பட அனைத்து விடயங்களையும் முன்னெடுக்க முடியும்” என்று டக்ளஸ் தேவானந்தா, மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X