2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

துணைபோனவர்களுக்கு பிணை வழங்க மறுப்பு

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வரணிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 12 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், குற்றத்தை மறைக்க முற்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தியதாகவும் கூறப்படும் 4 ஆசிரியர்களுக்கும் பிணை வழங்குவதற்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நந்தசேகரன் நேற்று வெள்ளிக்கிழமை (01) மறுப்புத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரான ஆசிரியர் உட்பட்ட அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் 3 ஆசிரியைகள் என ஐந்து பேர் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில், பிரதான சந்தேக நபர் தவிர்ந்த ஏனைய 4 பேரும் கடந்த 28ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கும், மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருக்கும் வகையில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பை, பழைய மாணவர் சங்கக் கூட்டமொன்று நடத்தி அச்சுறுத்தியவர்கள் என்ற வகையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

9 சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (01) நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிணை வழங்கப்படாத மிகுதி நால்வரும், இந்தக் குற்றத்துடன் தொடர்பில்லையெனவும், அவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் எனவும், பொலிஸாரின் முழுமையான விசாரணைக்கு நால்வரும் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மன்றில் கோரினர்.

எனினும், விசாரணைகள் மேற்கொள்ளும் வரையில் இவர்கள் சாட்சியங்களில் தலையீடுகளை மேற்கொள்ளக்கூடும் என்ற வகையில், அவர்களை தாங்கள் சொல்லும் வரையில் பிணையில் செல்ல அனுமதிக்க கூடாது என பொலிஸார் கோரிக்கை முன்வைத்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான், இந்த வழக்கில் ஒரு குற்றச்சாட்டை மறைத்து அதனை மறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்க முடியாது. இருந்தும், அடுத்த தவணையில் பிணை விண்ணப்பம் செய்தால் அது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என்றார்.

இதையடுத்து, வழக்கை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X