2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திருட்டை ஒழிக்க விழிப்புக்குழுக்களை ஏற்படுத்த வேண்டும்

Gavitha   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வட்டுக்கோட்டை பொலிஸ் பகுதிகளில் அன்மைக்காலமாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி என்பன அதிகரித்துச் செல்வதால், பிரதேச செயலாளர்கள் ஊடாக ஒவ்வொரு கிராமங்களுக்கும் விழிப்புணர்வு குழுக்களை நியமிக்குமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள் காரணமாக, பகல் நேரங்களில் கூட பெண்கள் அச்சம் கொண்டே பாதையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இரவு வேளைகளில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு, வீட்டிலுள்ளவர்களை கத்தி முனையால் அச்சுறுத்தி கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் இரவு நேரங்களிலும் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர், எந்த வீட்டில் திருடப்போகின்றோம், அங்கு யாரெல்லாம் இருக்கின்றனர் என்று ஆராய்ந்துக் கொண்ட பின்னர் திருட்டுகளில் ஈடுபடுவதாகவும் முக்கியமாக பெண்கள் மற்றும் வயோதிபர்கள் இருக்கும் வீடுகளை மையமாகக் கொண்டே இச்செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் சித்தங்கேணி சிவன்கோயில் பகுதியை அண்மித்த வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 15 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் வட்டுக்கோட்டை பண்ணாகம் பகுதியில், தனிமையில் இருந்த வயோதிப பெண்ணின் வீட்டுக்கு முகமூடி அணிந்துக் கொண்டுச் சென்ற கொள்ளையர்கள், 4 ஆயிரம் ரூபாய் பணத்தை திருட முற்பட்டுள்ளனர். எனினும், வயோதிப பெண் தனது பொருளாதார நிலையை கூறி அழவே, கொள்ளையடித்த பணத்தைத் திருப்பி கொடுத்து விட்டு சென்ற சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இக் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடுகள் மேற்கொண்டாலும், அதற்கான நடவடிக்கை எடுப்பதில் பொலிஸார் மந்த கதியிலேயே செயற்பட்டு வருகின்றனர் என்று மக்கள் குறிப்பிட்டனர்.

இதனால், விழிப்புணர்வுக் குழுக்களை ஏற்படுத்தி, இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X