2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தங்களை மறக்காமல் இருக்கவே வேதனமின்றி பணியாற்றுகின்றோம்

Niroshini   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தங்களை வடமாகாண சுகாதார திணைக்களம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக வேதனம் எதுவுமின்றி கடந்த ஜனவரி மாதம் முதல் கடமையாற்றி வருவதாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுகாதாரத் தொண்டர்கள்; தெரிவித்தனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள்; 34 பேரும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் காணப்பட்ட தொண்டர்கள் பற்றாக்குறை காரணமாக ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.   

6 மாத காலம் ஒப்பந்தம் முடிந்த பின்னர், விரைவில் 700 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. அதில், 34 பேருக்கும் முன்னுரிமையளிக்கப்படும் எனக்கூறி, மேலும் 3 மாதங்களுக்கு இவர்களுக்கான ஒப்பந்தத்தை வட மாகாண சுகாதார திணைக்களம் நீடித்தது.

இவர்களுடைய 3 மாத ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பருடன் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பணியில் இருந்து நிற்காமல் தொடர்ந்தும் வேதனமின்றி பணியாற்றி வருகின்றனர்.

வேதனமின்றி பணியாற்ற வேண்டாம் எனவும் நியமனம் வழங்கப்படும் போது பணிக்கு வருமாறும் வடமாகாண சுகாதார திணைக்களத்தால் கூறப்பட்டுள்ளது.  

எனினும், தாங்கள் வேலையில் இருந்து நின்றுவிட்டால் தங்களை மறந்துவிடுவார்கள் என்றும் இதனால் தங்களுக்கான நியமனங்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக வேதனமின்றி தொடர்ந்தும் நாளொன்றுக்கு 9 மணித்தியாலங்கள் கடமையாற்றப்போவதாகவும் குறித்த சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்தனர்.  

வேதனமின்றி கடமையாற்றுகின்ற போதும், தங்கள் கடமைகளை சீராகச் செய்வதாகவும் நோயாளர் காவு வண்டியில் நோயாளர்களைக் கொண்டு செல்வது போன்ற பணிகளையும் செய்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இதையடுத்து, வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வடமாகாண சபைக்கு வருகை தராததன் காரணத்தால், சுகாதாரத் தொண்டர்களைச் சந்தித்த உறுப்பினர்கள், அமைச்சரிடம் இவ்விடயத்தை தெரிவிப்பதாகவும், உரிய தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் வடமாகாண உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X