2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தண்ணீர் கொடுக்காத சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

George   / 2016 நவம்பர் 15 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தமக்கு உணவு, குடிநீர் தராமல், அழைத்து வந்துள்ளதாக ஊர்காவற்துறை நீதவானிடம், புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் முறையிட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது நீதவான், சந்தேகநபர்களிடம் “ஏதேனும் மன்றில் தெரிவிக்க போகின்றீர்களா?” என வினாவினார்.

அதனையடுத்து எட்டாவது சந்தேகநபர், தம்மை அழைத்து வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உணவு, தண்ணீர் தரவில்லை எனறு கூறினார்.

“வவுனியா சிறைசாலையில் இருந்து எம்மை, அனுராதபுர சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தான் அழைத்து வருகின்றார்கள். அதிகாலை 2.30 மணிக்கு, வவுனியா சிறைச்சாலைக்கு வந்து எம்மை எழுப்பி, காலை 4 மணிக்கு முன்னதாக, யாழ்ப்பாணம் அழைத்து வர தயாராகி விடுவார்கள்.

அங்கிருந்து, ஊர்காவற்துறை நீதிமன்றுக்கு அழைத்து வருவார்கள். வரும் வழியிலோ, நீதிமன்றில் வைத்தோ, எமக்கு உணவு, தண்ணீர் தருவது இல்லை” என நீதிவானிடம் சந்தேகநபர்கள் முறையிட்டனர்.

அதனையடுத்து நீதவான், சிறைச்சாலை உத்தியோகத்தர்களை எச்சரித்ததுடன், உடனடியாக அவர்களுக்கு உணவும், குடிநீரும் வழங்குமாறு உத்தரவிட்டார்.

“அத்துடன், சிறைச்சாலை ஆணையாளர், இது தொடர்பில் விசாரணை செய்து மன்றில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” எனவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X