Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜூன் 07 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டருக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான பாரதூரமான குற்றச்சாட்டை குறைத்துக் கொள்வது தொடர்பான கோரிக்கையை பரிசீலிப்பதுக்கு இணக்கம் தெரிவித்த சட்ட மா அதிபர், அது தொடர்பான முடிவை மன்றுக்கு அறிவிக்க, வவுனியா மேல் நீதிமன்றில் கோரப்பட்டது.
அதற்கு அமைவாக தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதிவரை ஒத்திவைத்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் உத்தரவிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி, போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 2009 மே மாதம் 18 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களான இளம்பரிதி மற்றும் திலக் ஆகியோருடன் இணைந்து அப்போது நடைபெற்ற போர் காலப் பகுதியில் புதுமாத்தளன் என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பொது மக்களை விடுவிக்காமல் தடுத்து, அவர்களை விடுதலைப் புலிகளின் தேவை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மனிதக் கேடயங்களாக்கியதன் மூலம் 2006ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுத்தல் விதிகளின் கீழ் 7 (ஊ) ஒழுங்குவிதியுடன் சேர்த்து வாசிக்கப்படக் கூடிய 11ஆவது ஒழுங்குவிதியின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளீர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (07) விளக்கத்துக்காக நியமிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் வழக்கு இன்று (07) விளக்கத்துக்காக அழைக்கப்பட்டது.
சந்தேகநபரான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மன்றில் முற்பட்டார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
வழக்குத் தொடுனர் சார்பில் பிரதி சொலிஸ்ரார் ஜெனரல் அசாத் நவாவியுடன் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார்.
வழக்கின் சாட்சிகளாக நீதிபதி ஹப்பு ஆராய்சி, சிவில் மற்றும் பொலிஸ் சாட்சிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மன்றில் முற்பட்டனர்.
“சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு பாரதூரமானது. அதனால் குற்றச்சாட்டை குறைத்து குற்றப்பத்திரிகையில் திருத்தம் மேற்கொண்டால், குற்றத்தை ஏற்றுக்கொண்டு வழக்கை நிறைவு செய்வதற்கான ஆலோசனையை எனது கட்சிக்காரரான சந்தேகநபருக்கு வழங்க முடியும்” என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்தார்.
எதிரியின் சட்டத்தரணி முன்வைத்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து மன்றுக்கு முடிவை அறிவிக்க கால அவகாசம் தேவை என்று பிரதி சொலிஸ்ரார் ஜெனரல் அசாத் நவாவி மன்றுரைத்தார்.
இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மன்று, வழக்கை வரும் ஜூலை மாதம் 8ஆம் திகதிக்கு நியமித்தது. அத்துடன், வழக்குத் தொடுனரின் அனுமதியுடன் அழைக்கப்பட்ட 5 சாட்சிகளையும் வழக்கிலிருந்து விடுவித்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago