2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நியமனங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும்

Niroshini   / 2016 ஜனவரி 26 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபையால் வழங்கப்படும் நியமனங்களில் வெளிப்படைத் தன்மைகள் இல்லாமையால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. உரிய விடயங்களை வெளிப்படுத்துவதன் மூலம் பலரது மனஉளைச்சலுக்கு தீர்வுகாண முடியும் என வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில், செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

வடமாகாண சபையால் வழங்கப்படும் நியமனங்களில் முறைகேடுகள் உள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. வெற்றிடங்களுக்கு ஆட்களை இணைக்கவுள்ளதாக பத்திரிகைகளில் மட்டும் விளம்பரம் செய்யாமல், உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். பத்திரிகைகள் போகாத இடங்கள் வடமாகாணத்தில் பல உள்ளன. அவ்விடங்களுக்கு நாங்களும் அதனைத் தெரியப்படுத்துவோம்.

வெற்றிடங்களுக்கு ஆட்சேர்க்கும்போது, வைக்கப்படும் பரீட்சையின் பெறுபேறுகளை, தனியே ஒருவர் மட்டும் பார்க்க கூடியதாக இல்லாமல், பொதுவாக அனைவரது பெறுபேறுகளை பார்க்கக்கூடியதாக இணையத்தில் பதிவேற்றுங்கள். நிலைகளையும் அதன்போது வெளிப்படுத்துங்கள்.

முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தில் குறைந்த புள்ளிகள் பெற்றவர்கள் உள்ளீர்க்கப்பட்டு, கூடிய புள்ளிகள் பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கூறப்படுகின்றன. இதற்கு சரியான வெளிப்படுத்தல் தன்மைகள் இல்லாமையே காரணம் ஆகும் என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,

பரீட்சை புள்ளிகளை வெளியிடுவதில் சரியான வெளிப்படைத்தன்மை இல்லாமையால், தான் பெற்ற புள்ளிகள் மூலம் வேலை கிடைக்குமா இல்லையா எனத் தெரியாமல் அரசியல்வாதிகளின் பின்னால் பலர் திரிகின்றனர். புள்ளிகள் கூடப்பெற்று தெரிவு செய்யப்படாவிட்டால் அதற்குரிய காரணத்தை உரிய முறையில் அவர்களுக்கு தெரிவியுங்கள். முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகங்களின் அதற்காக ஒரு அதிகாரியை நியமியுங்கள். தெரிவு செய்யப்படாமைக்கு உரிய காரணம் தெரிவிக்கப்பட்டால் வீணாக அரசியல்வாதிகளின் பின்னால் திரியமாட்டார்கள்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

எனது பிரத்தியேக செயலாளர் இவ்வாறான பிரச்சினைகளுக்கு நாளாந்தம் பதிலளித்து வருகின்றார். எனது அலுவலகத்தில் அவரைத் தொடர்புகொண்டால் அதற்கான பதிலை அவர் வழங்குவார். மேலும், கடிதம் மூலம் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு 2 கிழமைகளுக்கும் நாங்கள் பதிலை வழங்கிவருகின்றோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X