2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நன்னடத்தை அதிகாரிகளை பூட்டிய பெற்றோர் எச்சரித்து விடுவிப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளை அவர்களது மாவட்ட அலுவலகத்தில் வைத்து பூட்டிய பெற்றோர்களை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் எச்சரித்து அனுப்பிய சம்பவமொன்று, கடந்த வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவர்கள் ஏழு பேர், கடந்த வியாழக்கிழமை (30)  தனியார் காணி ஒன்றினுள் சென்று, இளநீர் மற்றும் பலாப்பழம் ஆகியவற்றை வெட்டியுள்ளனர்.

இதனை அவதானித்த காணி உரிமையாளர், நேரடியாக குறித்த பாடசாலைக்குச் சென்று, அதிபரிடம் தகவலை தெரியப்படுத்தி, மாணவர்கள் இனி இவ்வாறு நடந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த அதிபர,; ஏழு மாணவர்களையும் அழைத்து, அவர்களிடம் விசாரித்த போது, இளநீர் வெட்டிய கத்தியும் அவர்களிடம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மாணவர்களிடம் இருந்து தனித்தனியாகக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட அதிபர், உடனடியாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு  தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பாடசாலைக்குச் சென்ற பொலிஸார், பாடசாலை மட்டத்தில் பிரச்சினையைத் தீர்க்க முற்பட்ட போதும் அது சாத்தியமளிக்கவில்லை. 

இந்நிலையில், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கும் பாடசாலையால் அறிவிக்கப்பட்டு, நன்னடத்தை உத்தியோகத்தர்களால் குறித்த விடயம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

இதன்போது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால், ஏழு சிறுவர்களும் சிறுவர் இல்லத்துக்கு அனுப்பட்டுள்ளனர்.

பின்னர் வெள்ளிக்கிழமை (31), குறித்த ஏழு சிறுவர்களும் மீண்டும் நீதிமன்றுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவர்களை, ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வரை, மூன்று சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதற்கு நீதிமன்று உத்தரவிட்டது.

இருந்த போதும் பாடசாலை அதிபரின் முதிர்ச்சியற்ற இந்த நடவடிக்கை, பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினால் கண்டிக்கப்பட்டுள்ளன. இளநீர் வெட்டி தன்னுடைய பாடசாலை சிறுவர்களை, பாடசாலை நிர்வாகம் அதன் ஒழுக்க குழுவை கூட்டி,  ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அத்தோடு, சிறுவர்களின் பெற்றோர்களையும் அழைத்து அதிபர் கலந்துரையாடியிருக்க வேண்டும் என்றும்,  ஆனால் அதனை விடுத்து, இளநீர் வெட்டிய குற்றத்துக்காக, ஏழு சிறுவர்களையும் அதிபர்  நீதிமன்று வரை அனுப்பியிருக்க கூடாது என்றும்  பெற்றோர்களும் கல்வியலாளர்களும் தெரிவித்துள்ளனர்.

எனவே, குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தங்களுக்கு தெளிவுப்படுத்தாது செல்ல முற்பட்ட போதே, தாங்கள் அலுவலகத்தில் வைத்துப் பூட்டியதாக சில பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .