2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நல்லூர்த் திருவிழாவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற  நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழாவுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி வாழ்த்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி  கோவிலின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ் மிரர் பத்திரிகையால் வெளியிடப்படும் இந்த விசேட மலருக்கு எனது வாழ்த்துச் செய்தியினை  அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 நம்நாட்டின் பிரசித்தி பெற்ற இந்து சமய வழிப்பாட்டுத் தலங்களில் நல்லூர் கந்தசுவாமி திருத்தலம் முதன்மையானதாகும். உலகவாழ் இந்துக்கள் மிகுந்த பயபக்தியோடும் சிறப்போடும் அனுஷ்டித்து வரும் நல்லூர்  கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவானது, இந்துப் பக்தர்களின்  ஆன்மீக வழிபாட்டினதும் கலாசாரத்தினதும் மிகச் சிறந்த வெளிப்பாடாகும்.

 இந்துக்கள் மாத்திரமல்லாது தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் சிங்கள பௌத்த மக்களும் அதேபோல ஏனைய சமயத்தவர்களும் தவறாது நல்லூர் கந்தனை வணங்கி ஆசிபெறுவது நல்லூர் கந்தனின் சிறப்பை மேலும் பறைசாற்றி நிற்கின்றது.

'நல்லூர் கந்தனின் திருவிழாவைக் காண்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி' எனக் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு ஏராளமான  சிறப்புக்களைக் கொண்ட நல்லூர்க் கந்தனின் திருவிழா சிறப்பான முறையில் இடம்பெறவும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் எனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றேன்.

 பிரதமர் வாழ்த்து

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் தேர்த்திருவிழா இந்துக்களின் தெய்வபக்தியை வெளிப்படுத்தும் முக்கிய வைபவமாககத் திகழ்கின்றது. மிகுந்த இறை நம்பிக்கையுடன் இதில் பங்குபற்றும் அனைவருக்கும் இந்நிகழ்வு இறை பக்தியின் முக்கிய படிநிலையாகக் காணப்படுகின்றது.

இலங்கை அனைத்து சமூகங்களுக்கு மத்தியிலும்  சிறப்பான உறவுகள் வலுப்பெற புதியதோர் அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கின்றது. உண்மையிலேயே அனைத்துச் சமூகங்களுக்கும் எந்தவிதமான தடையுமின்றி தமது சமய ரீதியான சடங்குகளையும் சமூக ரீதியான செயற்பாடுகளையும் மேற்கொள்ளக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டாடி உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் இதுவாகும்.

இச்சந்தர்ப்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்புற இடம்பெற, அதன் ஏற்பாட்டாளர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X