2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நல்லூரிலிருந்து திருக்கேதீஸ்வரத்துக்கு பாதயாத்திரை

Niroshini   / 2016 மார்ச் 02 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபிர்

மகா சிவாரத்திரி தினத்தை முன்னிட்டு, பூநகரி, வேராவில் இந்து மாமன்றம், பூநகரி அருள்மிகு வெள்ளிப் பல்லக்கு வீரகத்தி பிள்ளையார் ஆலய நிர்வாகம் ஆகிவற்றின் இணைஏற்பாட்டில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கான பாதயாத்திரை இன்று புதன்கிழமை (02) ஆரம்பமாகியது.

இந்த பாத யாத்திரையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சின்மியாமிசன் ஜாக்கிரதைய சைதன்ய சுவாமிகள், செஞ்சோற்செல்வர் ஆறுதிருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ந.சண்முகலிங்கன் ஆகியோரும் இந்த பாதயாத்திரையில் கலந்துகொண்டனர்.

இந்தப் பாத யாத்திரை ஏ – 32 வீதி வழியாக மன்னாருக்குச் செல்லவுள்ளது.

பாதயாத்திரையை ஆரம்பித்து வைத்த பின்னர் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

சைவ சமய மக்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்ட சமூகமாகவுள்ளார்கள். கடந்த கால கசப்பான சம்பவங்களை மறக்க முடியாமல், திண்டாடுகின்றார்கள். அவற்றை மறந்து எதிர்வரும் காலங்களில் நாம் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

சமய, சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இந்தப் பாத யாத்திரை வழிவகுக்கும். மகனுடைய தலத்திலிருந்து தந்தை தலத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்வது மனதுக்கு ஆறுதலை தருகின்றது. மக்கள் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்வதற்கு மதங்களினூடாக பணிபுரிவது சாலச்சிறந்ததாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X