2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை சந்தித்தார் முதலமைச்சர்

Princiya Dixci   / 2017 மார்ச் 25 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வெள்ளிக்கிழமை (24) மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கடந்த 27ஆம் திகதி முதல், கால வரையறையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பட்டதாரிகள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த தரப்பினர்கள் இதுவரையில் சந்தித்துக் கலந்துரையாடவில்லை என்றும் பலரும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் பட்டதாரிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இதனால் பட்டதாரிகளுக்கு இதவரையில் சாதகமான எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை.

இந் நிலையில், யாழ். மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (23)  நடைபெற்ற நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் சென்றிருந்தனர்.
அவ்வாறு நிகழ்வுக்குச் சென்ற முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் தம்மைச் சந்தித்துக் கலந்துரையாடுவார்கள் என பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர். எனினும், அவர்கள் சந்திக்காது சென்றதால் பட்டதாரிகள், முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராகக் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

அத்தோடு, வடக்கு மாகாணத்தில் போராட்டம் நடத்துகின்ற தங்களைத் தங்கள் பிரதிநிதியான முதலமைச்சர் சந்திக்கவில்லையாயின் தம்மை இனி யார் சந்திப்பர் என்றும் கேள்வியெழுப்பியிருந்தனர். இதன்போது, பட்டதாரிகள், முதலமைச்சர் பதவி விலக வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, நேற்று (24) மாலை பட்டதாரிகளின் பிரதிநிதிகளை, தனது வாசஸ்தலத்துக்கு அழைத்து, முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன் பின்னர், இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண சபையின் அங்கத்துவக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அதன்போது இந்தவிடயம் தொடர்பில் தான் எடுத்தக் கூறுவதாகவும் அதற்கமைய வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவது தொடர்பில் அறிவிப்பதாகவும் முதலமைச்சர் பட்டதாரிகளிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X