2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பார்த்தீனியம் அழிப்புக்கு சட்ட நடவடிக்கை அலுவலர்கள் நியமனம்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தில் பெருகிவரும் பார்த்தீனியச் செடிகளை அழிப்பதற்குரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களையும் சேர்ந்த 101 அலுவலர்களுக்கு மத்திய அரசாங்கத்தால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்குரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு, புதன்கிழமை (20) திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு, அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலர்களிடம் மத்திய அரசாங்கத்தின் நியமனக் கடிதங்களையும் அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

பார்த்தீனியம் விவசாயத்துக்கும் உடல்நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இராட்சதக் களை என்று வர்ணிக்கப்படும் இச்செடி, ஒருவரது வீட்டுவளவினுள் அல்லது விவசாயக் காணியில் காணப்படின், அதனை அழிக்கத்தவறியதைக் குற்றமாகக் கருதி அவர் மீது சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இக்களைகளை அழிக்கத் தவறுபவர்களுக்கு, இலங்கையின் 1995ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒருமாதத்துக்குக் குறையாத ஆறுமாதங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையை வழங்க முடியும்.

அல்லது, அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்படாத தண்டப்பணத்தை அறவிடமுடியும். அல்லது இரண்டு தண்டனைகளையுமே விதிக்கமுடியும்.

பார்த்தீனியம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும்,பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சு பல செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளது.

சிரமதானம், வேலைக்கு உணவுத் திட்டம், பார்த்தீனியம் கொள்வனவு, களைநாசினி விசிறுதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாமையால் பார்த்தீனியத்தின் பரவுதலை முற்றாகக் கட்டுப்படுத்த இயலவில்லை.

இந்நிலையிலேயே, தற்போது பார்த்தீனியத்தை அழிக்கத் தவறுபவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் அலுவலர்களுக்கு மத்திய விவசாயத் திணைக்களத்தின் செயலாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

விசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், உள்ளூராட்சித் திணைக்களம், கமநலசேவைத் திணைக்களம் ஆகிய திணைக்களங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த அலுவலர்கள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தமது நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X