2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பொருத்தமில்லாத பயிரினங்கள் பயிரிடப்படுகின்றன

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாணத்துக்குப் பொருத்தமில்லாத இஞ்சி, மஞ்சள், கரும்பு, சந்தனம், மூங்கில் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுவிட்டு, அவை அழிவடைந்தவுடன், மாகாண விவசாய பணிப்பாளர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. ஆனால் அவை மாகாணத்துக்கு தெரியாமல் மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் பயிரிடப்படுகின்றது என்பதை அனைவரும் அறிய வேண்டும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உணவு உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டத்தை வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்தும் கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இவ்வாறான பயிர்ச் செய்கைள் இங்கு மேற்கொள்ள முடியாது. அவை தோல்வியில் முடிவடைகின்றன. பெருமளவான சந்தனமரக்கன்றுகள் யாழ்ப்பாணத்தில் விற்கப்பட்டு, அவை வளர்ச்சியடையாமல் தோல்வியடைந்தது. இதற்கு வடமாகாண விவசாய அமைச்சு மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.

இவ்வாறான பயிர்ச் செய்கைள் அறிமுகப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு மாவட்டச் செயலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போரால் பாதிக்கப்பட்ட எமது விவசாயத்துறையை மேம்படுத்த, மத்திய அரசுடன் கைகோர்த்து செயற்படவேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புக்கு அப்பால், எமது பொருளாதாரத்தையும் விவசாயத்தின் மூலம் நாங்கள் மேம்படுத்தலாம்.

மாகாணங்களுக்கு பொருத்தமான பயிர்களை பயிரிடுதல் இதில் முக்கிய விடயம். ஒரு அங்குல விவசாய நிலங்கள் கூட வீணாகக்கூடாது என ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

 வடமாகாணத்தின் பாரிய பண்ணைகள் இன்றும் இராணுவத்திடம் உள்ளன. அவற்றை விடுவித்து எங்களிடம் கொடுத்தால் நாங்கள் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடாக ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X