2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாலியல் துன்புறுத்தல்கள்: உதவியவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான், செல்வநாயகம் கபிலன்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான நவீல்ட் பாடசாலை அதிபருக்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்ட பாடசாலை விடுதி பொறுப்பாளரான 28 வயதுப் பெண்ணை, நவம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், புதன்கிழமை (28) உத்தரவிட்டார்.

துஷ்பிரயோகம் மற்றும் அதிலிருந்து தப்புவது தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றை, தென்மராட்சி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் அண்மையில் இந்தப் பாடசாலையில் நடத்தினர். இதன்போது, துஷ்பிரயோகம் மேற்கொள்ள நினைப்பவர் எவ்வாறான இடங்களில் தொடுகை செய்வார், அதிலிருந்து தப்புவது எப்படி போன்ற விடயங்களை உத்தியோகத்தர்கள் தெளிவுபடுத்தினர்.
 
விழிப்புணர்வு நிகழ்வு முடிவடைந்ததும், சிறுவர் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களிடம் சென்ற சில மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் தங்கள் பாடசாலை அதிபர், தங்களுடன் மேற்கூறியது போல தொடுகை செய்வது மற்றும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் நடப்பதாகவும் கூறினர்.
 
சிறுவர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இதனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன், இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் அதிபர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
 
சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட போது, விடுதி மேற்பார்வையாளரும் இதற்கு உடந்தையாக இருப்பதாக தெரியவந்ததையடுத்து, அவரை செவ்வாய்க்கிழமை (27) கைது செய்தனர். சந்தேகநபரான பெண் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .