2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பொலிஸார் எண்மருக்கு அழைப்பாணை

Thipaan   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்த  வழக்கில் எதிரிகளான பொலிஸார் எட்டுப்பேரையும், யாழ். மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிபதி மா.இளஞ்செழியன், செவ்வாய்க்கிழமை (06) அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பொலிஸாரின் பொறுப்பில் இருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்பவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியதாக பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சித்திரவதை சம்பவம் தொடர்பாக விசேட புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் நடத்தப்பட்ட இறுதி விசாரணைகளின் கோவைகள் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சித்திரவதை சம்பந்தப்பட்ட வழக்கு நேரடியாகவே மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற சட்ட விதப்புரைக்கமைய, சட்டமா அதிபரினால் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச மாநாட்டுத் தீர்மானத்துக்கு அமைவாக 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்திரவதை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 8 பொலிஸாருக்கு எதிராக இந்த வழக்கை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க முதியான்சலாகே சந்தக்க நிசாந்த பிரிய பண்டார, ஞானலிங்கம் மயூரன், பத்திநாதன் தேவதயாளன், ராஜபக்ஷ முதியான்சலாகே சஞ்சீவ ராஜபக்ச, கோன் கலகே ஜயந்த, வீரசிங்க தொரயலாகே ஹேமச்சந்திர வீரசிங்க, விஜயரட்னம் கோபி கிருஷ்ணன், முனுகொட ஹேவகே விஜேசிங்க ஆகிய எட்டு பொலிஸார் இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டு சித்திரவதைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

இந்த வழக்கில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவராகிய சிறிஸ்கந்தராசா சுமணன் மரணமடைந்துள்ளதாகவும், அவ்வாறு மரணமடைந்த பின்னர் இறந்தவருடைய உடலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை, முக்கிய தடயப் பொருளாக, எதிரிகளுககு எதிரான குற்றப்பகிர்வு பத்திரத்துடன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக 8 தமிழ் சிவிலியன்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிறில் அபேசிங்க உள்ளிட்ட 14 பொலிஸார், கிராம உத்தியோகத்தர் ஒருவர், மருத்துவ பரிசோதனை நடத்திய விசேட சட்ட வைத்திய அதிகாரி திலக் ரமேஸ் அழகியவண்ண, விஜயபாகு படைப்பிரிவைச் சேர்ந்த 2 இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் 3 குற்றப் புலனாய்வு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 29 பேர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சிகள் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு முதற் தடவையாக நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்தன் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள 8 பொலிஸாரும் கடமையில் இருப்பதாகத் தெரிவித்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவதற்கு குற்றப் புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக அழைப்பாணை பிறப்பிக்குமாறு  நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X