2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பொலிஸார் ஐவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால், நேற்றுக் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் ஐவரையும், எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன், இன்று சனிக்கிழமை (22) உத்தரவிட்டார்.

5 பொலிஸாரையும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் விசாரணைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (24) யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

உயிரிழந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரில், ஒருவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதன் நிமித்தம் ஏற்பட்ட விபத்தால் மற்றைய மாணவனும் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு இரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் உடல்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்தனர்.

கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்களின் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X