2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுக்கு தடை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தில், அர்ச்சனைத் தட்டுக்கள் விற்பனை செய்யும் கடைகளில் பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுகள் விற்பனை செய்வதற்கு  தடை விதித்துள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுக்களுக்குப் பதிலாக, பனையோலையில் தயாரிக்கப்பட்ட அர்ச்சனைத் தட்டுக்களே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அவற்றை, மாவட்ட மகளிர் அமைப்புக்கள் ஊடாகவும் பனைசார் உற்பத்தியாளர்களிடமிருந்தும், குறைந்த விலைகளில் வியாபாரிகள் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'இதேவேளை, மேற்படித் திருவிழாக் காலத்தில், 20 மைக்றோவுக்குக் குறைவான பொலித்தீன் பாவனை, உக்கலடையாத பொருட்களின் பாவனை என்பவற்றுக்கும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களும், கடமையில் ஈடுபடுபவர்களுக்கு கலாசார உடைகளை அணிய வேண்டும். ஆலய வெளிவீதியில் அங்கப் பிரதட்சனை செய்வதற்காக கொட்டப்பட்டுள்ள மணலை அசுத்தப்படுத்தககூடாது. ஆலயச் சூழலில் அமைக்கப்படும் வாகனப் பாதுகாப்பு நிலையங்களில், சைக்கிள்களுக்கு 5 ரூபாயும் மோட்டார் சைக்கிள்களுக்கு 10 ரூபாயும் மாத்திரமே அறிவிடப்படல் வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அவர் கூறினார்.

அத்துடன், 'ஆலயத்தின் முக்கிய திருவிழாக் காலங்களில், ஆலயத்துக்குள் நுழையும் காவடிகள், வடக்கு வீதிப்பக்கமாக நுழைந்து, குபேர வாசலில் தங்கள் நேர்த்திக் கடனை முடித்த பின்னர், கோவில் வீதி வழியாக தெற்கு பக்கமாக வெளியேற வேண்டும்.

ஆலயத்தைச் சூழ அமைக்கப்படும் வீதித்தடைகள், எதிர்வரும் 7ஆம் திகதி பிற்பகல் 2 மணியுடன் அமுலுக்கு வருகின்றன. ஆலயச் சூழலில் கடைகள் அமைத்தவர்கள், தங்கள் பொருட்களை இடமாற்றுவதற்காக மாத்திரம் மதியம் 12 மணி முதல் 2 மணிவரையில் பாதை திறக்கப்படும்.

மேலும், அப்பகுதியில் குடியிருப்பவர்கள், கடைகள் வைத்திருப்பவர்கள், அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு, சென்று வருவதற்கு விசேடமான அடையாள அட்டை வழங்கப்படும்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X